உழைப்பும், சேமிப்பும் – ‘எறும்பு’ – விமர்சனம்.

சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், சூசன் ஜார்ஜ், மோனிகா சிவா, சக்தி ரித்விக் உள்ளிட்ட பலரது நடிப்பினில் உருவாகியிருக்கும் படம், எறும்பு!

விவசாய கூலி, சார்லி. இவர், முதல் மனைவி இறந்த பின்னர், சூசன் ஜார்ஜை இரண்டாவதாக மணந்து கொள்கிறார். மூத்த மனைவிக்கு மோனிகா சிவா, சக்தி ரித்விக் என இரண்டு பிள்ளைகள். இதில் மோனிகா சிவா, சித்தி சூசன் ஜார்ஜுக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருக்கிறாள். சிறுவன் பள்ளி சென்று வருகிறான்.

சார்லி, சூசன் சார்ஜ் தம்பதியினருக்கு கைக்குழந்தை இருக்கிறது.  அந்தக் குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு மோதிரம் பரிசாக கிடைக்கிறது. அதை விரல்களில் அணிந்து கொள்ள, சிறுவன் சக்தி ரித்விக்கிற்கு ஆசை ஏற்படுகிறது.

வட்டியை வசூல் செய்ய எந்த அளவிற்கும் இறங்கும், எம்.எஸ்.பாஸ்கரிடம் வாங்கிய கடனை அடைக்க சார்லியும், சூசன் ஜார்ஜும் விவசாய கூலி வேலைக்கு செல்கின்றனர். திரும்பி வர சில நாட்கள் ஆகும் நிலையில், சிறுவன் சக்தி ரித்விக்கிற்கு அவனது பாட்டி, குழந்தையின் மோதிரத்தை எடுத்து கொடுக்கிறார். அதை அணிந்து விளையாடும்போது, மோதிரம் தொலைந்து விடுகிறது. இந்த விஷயம் சித்திக்கு தெரிந்தால், என்ன செயவது? என பயத்தால் நடுங்கி அழுகிறான் சக்தி ரித்விக் தமியை இதிலிருந்து விடுவிக்க அவனது அக்கா மோனிகா சிவா என்ன செய்கிறாள்? வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வரும் சார்லி, சூசன் இருவரும் மோதிரத்தை கொண்டு ஈடு செய்ய முடிவு செய்கின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது! என்பதை வலியுடனும், நெகிழ்ச்சியுடனும் கூடிய திரைக்கதையில் சொல்வதே எறும்பு.

ஏழை விவசாயியாக சார்லி. அவரது மனைவியாக சூசன் ஜார்ஜ், இருவருமே காதாபாத்திரத்துடன் இணைந்து, எதார்த்தமாக நடித்திருக்கின்றனர். அதிலும் சூசன் ஜார்ஜ் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில், மோனிகா சிவா, சக்தி ரித்விக் இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, தண்ணீர் எடுத்து கொடுப்பது சிறப்பு! அதற்கு ஈடு கொடுக்கும் நடிப்பினை கொடுத்திருக்கிறார், சிறுமி மோனிகா சிவா.

யார் வீட்டுல என்ன நடந்தா, எனக்கு என்ன? என்னோட வட்டிப்பணம் வந்து விடவேண்டும் என்பதில் குறியாக இருக்கும், கல் நெஞ்சு மனசுக்காரர் கதாபாத்திரத்தில் எம். எஸ். பாஸ்கர், சிறப்பாக நடித்திருக்கிறார்.

அரைகுறை மனநலம் பாதித்த கதாபாத்திரத்தில், சிரிக்க வைத்து மனதில் நிறைகிறார், ஜார்ஜ் மரியான். குறிப்பாக முட்டை மந்திரத்தால், சாமி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று, அவர் எடுக்கும் முடிவு குபீர் சிரிப்பினை ஏற்படுத்துகிறது.

கடனை அடைக்க சார்லி, சூசன் சார்ஜ் தம்பதி, மறுபடியும் சிறு சிறு கடனாகவும், அடுத்தவர்களின் உதவியுடனும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

ஆனால், மோனிகா சிவா தம்பி தொலைத்த மோதிரத்திற்காக, அதை வாங்க சின்னச்சின்ன உழைப்பினை போட்டு பணம் சம்பாதித்து, சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறாள்.

சிறுவர்கள் மூலம் பெரியவர்களுக்கு பாடம் சொல்லும் படம்.

மொத்தத்தில் உழைப்பையும், சேமிப்பையும் நெகிழ்ச்சியுடன் போதிக்கிறது. எறும்பு.