சார்லஸ் எண்டர்பிரைசஸ் – நேம் போர்டு தவிர, எதுவும் இல்லை! – விமர்சனம்.

சார்லஸ் எண்டர்பிரைசஸ் – விமர்சனம்.

ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலரது நடிப்பினில், வெளியாகியிருக்கும் படம் ‘சார்லஸ் எண்டர்பிரைசஸ்.  மலையாளத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம், தமிழில் ‘டப்’ செய்யப்பட்டுள்ளது. எப்படி இருக்கிறது?

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஊர்வசி, குரு சோமசுந்தரம் தம்பதியினரின் ஒரே மகன் பாலு வர்கீஸ். கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஊர்வசி, காஃபி ஷாப்பில் வேலைசெய்து வரும், மாலை நேர பார்வை குறைபாட்டுடைய, தனது மகன் பாலு வர்கீஸூடன் வாழ்ந்து வருகிறார்.

ஊர்வசி குடும்பத்தினரிடையே சொத்தை பிரிக்கும் போது, ஒரு அபூர்வமான பிள்ளையார் சிலை அவருக்கு கிடைக்கிறது. பல கோடிகள் மதிப்புடைய அந்த சிலையின் மதிப்பு தெரியாமலேயே அவர் அதை பூஜித்து வருகிறார்.

அந்த சிலை, ஊர்வசி வீட்டில் இருப்பதை அறியும் சிலை கடத்தும் கும்பல், அதை கைப்பற்ற முயற்சிக்கிறது. இன்னொரு புறம், அந்த அபூர்வ சிலையின் மதிப்புணர்ந்த ஆன்மீகவாதிகள் அந்த சிலையை பிரதிஷ்டை செய்து, கோவில் கட்ட முயற்சி செய்கின்றனர். இன்னொரு புறம் வேலை இழக்கும் பாலு வர்கீஸ், அந்த சிலையை விற்று சொந்தமாக காஃபி ஷாப் வைக்க முயற்சி செய்கிறார். இறுதியில் அந்த சிலையை யார், கைபற்றினார்கள்? என்பது தான், சார்லஸ் எண்டர்பிரைசஸ் படத்தின் கதை!

பரபரப்பான, விறுவிறுப்பான திரைக்கதை அமைக்க, கதையில் பல வாய்ப்புக்கள் இருந்த போதிலும், அதை இயக்குநர் தவற விட்டுள்ளார். பாலு வர்கீஸின் கண்பார்வை குறைபாடு, திரைக்கதையை எந்த வகையிலும் சுவாரசியப்படுத்த உதவவில்லை!

படத்தின், முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை, எந்த விதமான சுவாரசியமும் இல்லை. காட்சிகள் மெதுவாக நகர்வது மேலும், பார்வையாளார்களுக்கு சோர்வைத் தருகிறது.

நடிப்பினை பொறுத்தவரை, ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம் உள்ளிட்டவர்கள் இயக்குநரின் விருப்பப்படியே நடித்துள்ளனர்.

சார்லஸ் எண்டர்பிரைசஸ் – நேம் போர்டு தவிர, எதுவும் இல்லை!