முதல்முறையாக உங்களிடம் கையேந்துகிறேன்! – உடுமலை கவுசல்யா

முதல்முறையாக உங்களிடம் கையேந்துகிறேன்! – உடுமலை கவுசல்யா

உடுமலை சங்கரின் கொடூர ஆணவப்படுகொலை சம்பவத்தை மனிதாபிமானம் படைத்த யாரும் அத்தனை எளிதில் மறந்து விடமுடியாது. கணவரை பறிகொடுத்த கௌசல்யா புதிய வாழ்க்கையை தொடர்ந்து வரும் நிலையில் ஒரு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.அதன் விபரம் வருமாறு..

சங்கர் பிறந்த ஊரான குமரலிங்கத்தில் அவன் நினைவாக சங்கர் தனிப்பயிற்சி மையம் எனும் மாலை நேரப் பள்ளியைத் தொடங்கினோம். சாதி ஒழிப்புக்குரிய பணியை மாணவர்களிலிருந்து தொடங்க வேண்டும் என்ற உந்துதலே இதற்குக் காரணம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு அவர்களின் கல்வி உயர்வு எவ்வளவு அடிப்படையானது என்பதையும் உணர்ந்திருந்தோம். இந்தத் தனிப்பயிற்சி மையம்தான் சங்கர் சமூகநீதி அறக்கட்டளையாக மலர்ச்சி பெற்றது.

அறக்கட்டளை சார்பில் தற்போதும் நடைபெற்று வரும் தனிப்பயிற்சிக்குத் தடையாக ஒரு நெருக்கடி தோன்றியுள்ளது. சங்கர் வீட்டுக்குப் பக்கத்தில் சமூகநலக் கூடம் உள்ளது. அங்கேதான் தனிப்பயிற்சி இதுவரை நடைபெற்று வந்தது.

சனி, ஞாயிறுகளில் பறைப் பயிற்சியும் தருகிறோம். அதுவும் அங்கேதான் நடந்து வந்தது. அந்தச் சமூகநலக் கூடத்தில் இனி தனிப்பயிற்சியைத் தொடரக் கூடாது என்று அதன் பொறுப்பாளர்கள் சொல்லிவிட்டனர். பிள்ளைகள் சத்தம் தொந்தரவாக இருக்கிறதாம்.

நாம் இல்லாத நேரத்தில் ஆசிரியர்களிடம் வந்து அதன் பொறுப்பாளர்கள் குரல் உயர்த்திப் பேசுவதும் வாக்குவாதம் செய்வதும் தொடர்கிறது. இப்படியே தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க முடியாது என்பதை அறிவீர்கள். ஆனால், நம்மிடம் இதுவரை யாரும் பேசவில்லை. நமக்கும் அவர்களோடு பேசும் எண்ணமில்லை.

அந்தப் பகுதியில் நாம் உருவாக்க விரும்பும் மக்கள் ஒற்றுமையைக் காலத்தால் சிதைந்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் அறக்கட்டளைக்கென்று தனிபயிற்சி நடத்த சொந்த இடம் வேண்டும். புதிதாக அதை வாங்க முடியாது.

சங்கர் வாழ்ந்த வீட்டிலிருந்துதான் அவன் பெயிரிலான அறக்கட்டளை இயங்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதனால், நான் அரசு நிதியில் கட்டிய சங்கர் வீட்டு மாடியில் ஒரு குடில் எழுப்ப முனைகிறோம்.

காலாகாலத்துக்கும் அது தனிபயிற்சிக்கான நிரந்தரமான இடமாக ஆக்கிவிடத் திட்டம். அலுவல் பணிகளையும் இங்கிருந்தே செய்து கொள்ளலாம். அதனால், முடிந்த அளவு குறைந்த திட்டத்தோடு, ஆனால் நிறைவான குடில் ஒன்றை கட்டி எழுப்ப வேண்டும்.

தனிப்பயிற்சி தடையின்றி நடக்க வேண்டும். நம் மாணவர்களுக்கு நாம் தரும் கல்வியில் எந்தத் தடைக்கும் இடம்தரக் கூடாது. சமூகநீதி நோக்கத்தில் நாம் நடத்தும் தனிப்பயிற்சி இடைவெளியின்றி நடந்தாக வேண்டும். சின்ன இடைவெளி வந்தாலும் அது மாணவர்களின் கல்வி ஆர்வத்தைக் கெடுக்கும். மீண்டும் அவர்களை ஒன்று சேர்ப்பது கடினமாகிவிடும். தொடர்ச்சி கெட்டுப்போனால் நம்பிக்கை குலைந்து போகும்.

கல்விப் பணி தொய்வின்றித் தொடர நிரந்தரமான குடில் அமைக்கிறோம். ஒரு பைசாவும் இப்போது எம்மிடம் இல்லை. அதற்காக மலைத்துப் போய் நிற்க முடியாது. ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் ஆகும் என்கிறார் வந்து பார்த்த பொறியாளர்.

மொட்டை மாடி என்பதால் மழைக்கும் வெயிலுக்கும் பொருத்தமாக அமைக்க வேண்டும். அதிலும் வீடு போல் அல்லாமல் சுற்றிலும் திறந்த வெளி இருக்க வேண்டும். விரைவில் பணிகள் தொடங்கியாக வேண்டும். செய்து முடித்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஏனென்றால் நான் இந்தத் தமிழ்ச் சமூகத்தை முழுமையாக நம்பி நிற்பவள்!

முதல்முறையாகக் சமூகநீதி நோக்கிலான கல்விப் பணிக்குக் கையேந்துகிறேன். பெரும் தொகைதான். ஆனால் உங்களால் இயன்றதைத் தந்தால் போதும். சிறு துளி வெள்ளமாகும். பெரும் நம்பிக்கையோடு வேண்டுகிறேன். இயன்றதைச் செய்யுங்கள்.

பணமாகக் கூட நான் எதிர்பார்க்கவில்லை. அதற்குரிய ஏதோ ஒரு பொருளை குளிர்ச்சி தாள் , கம்பி. மேற்கூரை இப்படி ஏதோவொன்றை நீங்களே வாங்கித் தரலாம், அல்லது இறக்கியும் தரலாம்.

எதுவாகிலும் தொகை வருகையும் செலவுகளும் வெளிப்படையானதாக இருக்கும் என்ற உறுதி தருகிறேன். எவ்வளவு வருகிறது, செலவாகிறது என்பதை வேலை நடக்க நடக்க வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வேன்.

தேவைக்குரியது வந்துவிடும் போது இத்தோடு நிதி போதும் என்பதையும் அறிவித்து விடுவேன். பணி தொடங்கி நடக்கும் போது யாரும் நேரில் வந்து பார்வையிடலாம்.

எல்லாம் சொல்லிவிட்டேன். சொன்னபடி நடப்பேன். மற்றபடி இனி நீங்களே முடிவு செய்யுங்கள்.

அன்புடன்
கௌசல்யா

அலைப்பேசி எண்: 90804 83381
மின்னஞ்சல்: c.gowsalya2014@gmail.com

Ac.no: 016801000025696
IFSC: IOBA0000168
Name: Gowsalya .S
Indian overseas Bank
Komaralingam branch