கட்டா குஸ்தி – விமர்சனம்!

வி வி ஸ்டுடியோஸ் – ஆர்.டி டீம் ஒர்க்ஸ் சார்பில், விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா இணைந்து தயாரித்துள்ள படம், கட்டா குஸ்தி. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கருணாஸ், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர்  நடித்திருக்க, செல்லா அய்யாவு கலகலப்பான கதை, திரைக்கதை, எழுதி, இயக்கியிருக்கிறார்.

குடும்பத்தினருடன் பாலக்காட்டில் வசித்து வருபவர் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. சிறுவயதிலிருந்தே தனது சித்தப்பா முனீஸ்காந்துடன் அவர் கலந்து கொள்ளும், அனைத்து மல்யுத்த போட்டிகளுக்கும் சென்று வருகிறார். எந்தப் போட்டியிலுமே ஜெயிக்காத முனிஸ்காந்துக்கு, வெற்றி பெற சில டிப்ஸ்களை கொடுக்கும் அளவிற்கு மல்யுத்தத்தின் மீது அலாதி பிரியம் ஏற்படுகிறது. காலங்கள் கடந்த நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நடக்கும் போட்டியில் வெற்றிகளை குவிக்கிறார்.

கல்யாண வயதினை எட்டிய ஐஸ்வர்யா லக்ஷ்மியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார், மல்யுத்த வீராங்கனை என்பதனால் அவரை தவிர்க்கின்றனர். இதனால் முனீஸ்காந்த், பொள்ளாச்சியை சேர்ந்த தனது நண்பர் கருணாசின் உறவினரான விஷ்ணு விஷாலிடம் சில பொய்களை சொல்லி ஐஸ்வர்யா லக்ஷ்மியை கல்யாணம் செய்து வைத்துவிடுகிறார். இது, கல்யாணம் நடந்த சில மாதங்களுக்கு பிறகு கருணாசுக்கும், விஷ்ணு விஷாலுக்கும் தெரிய வருகிறது! இதன் பிறகு என்ன நடந்தது. என்பதை, கலகலப்பான திரைக்கதை மூலம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார். இயக்குனர் செல்லா அய்யாவு!

படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை சிரிப்பலையில் தியேட்டரே குலுங்கிறது. குறிப்பாக கருணாஸ் இடம் பெறும் காட்சிகளில் கலகலப்பு இரட்டிப்பாகிறது. அதோடு காளி வெங்கட், முனீஸ்காந்த், ஹரிஷ் பெராடி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் வரும் காட்சிகளும் சிரிக்க வைக்கிறது. ஆண்களை பற்றிய விமர்சனக் காட்சிகளுக்கு பெண்களும், பெண்களை பற்றிய விமர்சனக் காட்சிகளுக்கு ஆண்களும் போட்டிப் போட்டு சிரிக்கின்றனர்.

விஷ்ணு விஷால், கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் மனைவியிடம் காட்டும் வெட்டி பந்தா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் அதிரடி சண்டைக்காட்சியை பார்த்து விக்கித்து நிற்பது, காளி வெங்கெட்டிடம் கெத்து காட்டுவது என அனைத்து காட்சிகளிலுமே சிறப்பாக நடித்திருக்கிறார்.

மல்யுத்த போட்டிக் காட்சியிலும், வில்லன்களிடம் மாட்டிய விஷ்ணு விஷாலை காப்பாற்ற சுற்றிச் சுழன்று அடிக்கும் காட்சியிலும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பளிச்சிடுகிறார். படம் முழுவதும் பல்வேறு பாவனைகளை காட்டி சிறப்பாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விஷ்ணு விஷாலுக்கு கடமை பட்டவர். கதாநாயகனை மிஞ்சும் கதாபாத்திரம் அவருக்கு. அதை சிறப்பாகவும் செய்திருக்கிறார்.

படத்தினை குளு குளுவென படமாக்கியிருக்கும், ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்தின் பலம். விஷ்ணு விஷாலும், ஷத்ருவும் மோதிக்கொள்ளும் க்ளைமாக்ஸ் ஃபைட்டே அதற்கு சாட்சி. இந்த சண்டைக் காட்சியினை வடிவமைத்த இயக்குநர்கள் அன்பறிவ். பாராட்டுக்குரியவர்கள். இந்தக்காட்சியினை மேலும் சிறப்புற செய்திருக்கிறது, ஜி.கே-வின் படத்தொகுப்பு!

ஜஸ்டின் பிரபாகரனின் இசை ஓகே!

படத்தில் அடிக்கடி இடம்பெறும் ‘குடி’ தொடர்பான காட்சிகளை தவிர்த்திருக்கலாம்!

நல்ல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வரும் விஷ்ணு விஷாலுக்கு இந்தப்படம், வெற்றியைக் கொடுக்கும்.

‘கட்டா குஸ்தி’ – தம்பதிகளுக்கான அறிவுரை தரும் ஜாலியான படம்!