வதந்தி – ஃபேபிள் ஆஃப் வெலோனி – விமர்சனம்!

புஷ்கர் – காயத்ரி இயக்குனர்கள் ‘வால் வாட்சர் ஃபிலிம்ஸ்’   நிறுவனம்  சார்பில் தயாரித்துள்ள வலைதள தொடர், ‘வதந்தி –  ஃபேபிள் ஆஃப் வெலோனி’ .  இத்தொடரை  எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கிறார்.  ‘வெலோனி’ என்ற ஆங்கிலோ இந்திய பெண் கதாபாத்திரத்தில், அறிமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார். இவருடன்  எஸ். ஜே. சூர்யா, நாசர், லைலா, விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர்  நடித்திருக்கிறார்கள்.

சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு, சைமன்  கே. கிங் இசையமைத்திருக்கிறார். ஃபேபிள் ஆஃப் வெலோனி  தொடர், எட்டு பாகங்களாக  ‘அமேசான்  ப்ரைம் வீடியோ’ வில் வெளியாகியிருக்கிறது.

ஃபேபிள் ஆஃப் வெலோனி  தொடரின்  தயாரிப்பாளர்களான  புஷ்கர் – காயத்ரி இயக்கிய ‘சுழல்’ தொடர், ‘அமேசான்  ப்ரைம் வீடியோ’ வில் வெளியாகி உலகெங்கிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், இத்தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகம்.

எஸ். ஜே. சூர்யா, முதன் முதலாக வலைதள தொடரில் அறிமுகமாகியிருக்கிற, ‘மிஸ்டரி க்ரைம் த்ரில்லர்’ ‘ஃபேபிள் ஆஃப் வெலோனி’  தொடர் எப்படியிருக்கிறது, பார்க்கலாம்.

சிறிய வகையில் தங்கும் விடுதி நடத்தி வரும் லைலா, கணவனை இழந்தவர். மறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது டீன் ஏஜ் பெண்ணான, சஞ்சனாவுடன் வாழ்ந்து வருகிறார். லைலாவின் கடும் கட்டுப்பாட்டில் இருந்துவரும் சஞ்சனா ஒரு நாள் ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். இது கொலையா? அப்படி என்றால், இதற்கான காரணம் என்ன? என்பதை, கண்டுபிடிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி எஸ்.ஜே.சூர்யா. இதுவே ‘ஃபேபிள் ஆஃப் வெலோனி’  தொடரின் சுவாரஸ்யமான, விறு விறுப்பான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

எட்டு பாகங்களாக வெளியாகியிருக்கும் ‘ஃபேபிள் ஆஃப் வெலோனி’  தொடரின் ஒவ்வொரு பாகமுமே சுவாரஸ்யமாக இருக்கிறது. யூகிக்க முடியாத திரைக்கதை அமைப்பு! தொடர் ஆரம்பித்த சில காட்சிகளிலேயே டிவிஸ்ட் கொடுத்து இருக்கிறார், இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். இந்த டிவிஸ்ட் ஓவ்வொரு பாகத்திலும் இருப்பது தான், இந்ததொடரின் தனிச்சிறப்பு! அது போல் கொலையாளி யார் என்பதில் போலீஸ் அதிகாரி எஸ்.ஜே.சூர்யா திணறுவதை போல் தொடரைப் பார்ப்பவர்களும் திணறிப் போவார்கள். ஒரு சிலர் சஸ்பென்ஸ் தாளாமல் கடைசி பாகத்தை பார்த்து விட துடிப்பர்! அப்படி செய்தால், ஒரு நல்ல ‘மிஸ்டரி க்ரைம் த்ரில்லர்’ தொடரை அனுபவிக்க தவற விடுவீர்கள்! எனவே ஒவ்வொரு பாகமாக ரசித்து பார்க்கவும்.

‘ஃபேபிள் ஆஃப் வெலோனி’  தொடரில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸின் நடிகர்கள் தேர்வு, கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

ஆங்கிலோ இந்திய பெண்மணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த லைலா, சிம்ப்ளி சூப்பர்! அதிலும் க்ளைமாக்ஸில் கழுத்தில் அறுபட்டு படுக்கையில் கிடக்கும் போது லைலாவை எஸ்.ஜே.சூர்யா விசாரிக்கும் காட்சி, அங்கிள் ஆண்டனிடம் இருந்து சஞ்ஜ்சனாவை காப்பாற்றும் காட்சி, ‘கல்யாணம் பண்ணிகிட்டு என்ன பண்ணப்போற!? எனும் காட்சியிலும் லாவகமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர், குமரன் தங்கராஜன் கிடைத்த காட்சிகளில் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார். அவரை போலீஸ் விவேக் பிரசன்னா, விசாரணை செய்யும் போது அழுதுகொண்டே, கைகளில் சின்ன நடுக்கத்தினை ஏற்படுத்தி சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார்.

‘வெலோனி’ கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சஞ்சனா, தன்னுடைய நடிப்பின் மூலம் தொடர் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார். டீன் ஏஜ் கதாபாத்திரத்திற்கேற்ற அனைத்து குணங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் நாசருடன் பழகும் காட்சிகளிலும், லைலாவுடன் கோபித்துக் கொள்ளும் காட்சிகளிலும், குமரன் தங்கராஜனிடம் வெறுப்பினை காட்டும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பினை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார்.

நேர்மையான விசாரணை அதிகாரியாக வரும் எஸ்.ஜே.சூர்யா, கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் மனைவி ஸ்மிருதி வெங்கட்டிடம் புலம்பும் காட்சியிலும், அதனால் ஏற்படும் சிறு குடும்பப் பிரச்சனையும் அவர் மேல் சிரிப்பையும், பரிதாபத்தையும் வரவழைக்கிறது. தன்னுடைய நடிப்பின் மூலம் நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக இறுதியில் கொலையாளியை நெருங்கும்போது, அவர் அதிர்ச்சி அடைவதைப்போல் பார்ப்பவர்களும் அதிர்ச்சி அடைவார்கள்.

தொடர் முடிந்தாலும், எஸ்.ஜே.சூர்யா மனதினை விட்டு எப்படி ‘வெலோனி’ விலகாமல் இருக்கிறாரோ, அதேபோல் உங்கள் மனதையும் விட்டு அகலாமல் இருப்பார் வெலோனி!

அனைத்து நடிகர்களின் பங்களிப்பு, லொகேஷன், காட்சியமைப்பு உள்ளிட்டவைகள் சிறப்பாக இருந்தாலும், ஆங்காங்கே இருக்கும் லாஜிக் மீறல்கள். ‘உண்மை நடக்கும்… பொய் பறக்கும்.’  போன்ற ‘கன்னியாகுமரி’ வட்டார வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அதை பேசும் பாஷையில் கோட்டை விட்டுள்ளார், இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். ஒவ்வொரு கதாபாத்திரமும் வெவ்வேறு விதத்தில் பேசுவதை முறைபடுத்தியிருந்தால், வெகு சிறப்பாக இருந்திருக்கும்.

தற்போது செய்தி தாள்களில் நாம் படித்துவரும் பல செய்திகள், அந்தந்த பத்திரிக்கை நிறுவனத்தின் கற்பனை திறனுக்கேற்றபடி, மெருகூட்டிய கட்டுக் கதைகளைத் தான் என்பது! விஷயம் தெரிந்த பலருக்கு தெரிந்திருக்கும்.

இறந்து போன சடலங்களை உண்டு மகிழும் பிராணிகளை போல் இருக்கும் பத்திரிக்கைகளும், மக்களும் திருந்துவார்களா? எனும் சமுதாயத்தை நோக்கி கேள்வி எழுப்பிய இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ், தயாரித்த இயக்குனர்கள் புஷ்கர் – காயத்ரி பாராட்டுக்குரியவர்கள்.

வேலோனி – நல்ல ‘மிஸ்டரி க்ரைம் த்ரில்லர்’