‘காரி மோட்டார் ஸ்பீடுவே’ பந்தய டிராக்கில் ‘GDN’ டிரெய்லர் வெளியீடு!

“இந்தியாவின் எடிசன்” என்றும், “கோயம்புத்தூரின் தொழில்துறை தந்தை” என்றும் போற்றப்படும் ஜி. டி. நாயுடு அவர்களின் வாழ்க்கை, உத்வேகம் அளிக்கும் பல திருப்பங்களைக் கொண்டது. பயோபிக் (Biopic) எனப்படும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட வரிசையில், முற்றிலும் புதிய கோணத்தில் அவரது அசாதாரணமான பயணத்தை உலகிற்கு எடுத்துரைக்க வருகிறது ‘GDN’ திரைப்படம். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரிகோலர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தை, இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார்.

‘GDN’ திரைப்படம் வழக்கமான ஒரு முழு நீள வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல், ஜி. டி. நாயுடுவின் வாழ்வில் நடந்த மிக முக்கியமான திருப்புமுனைகளை மட்டுமே மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காலனித்துவ ஆட்சிக் காலத்திலும், அதற்குப் பிந்தைய சுதந்திர இந்தியாவின் ஆரம்பக் கட்டத்திலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்த நாயுடு முயன்றார். அவரது உலகத்தரம் வாய்ந்த கண்டுபிடிப்புகளையும், தொழில்துறை தொலைநோக்குப் பார்வையையும் முடக்க நினைத்த சில அதிகார வர்க்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக அவர் எவ்வாறு போராடினார் என்பதே இப்படத்தின் முக்கியக் கதைக் களம் ஆகும்.

“பிரிட்டிஷாருக்கு சிம்மசொப்பனம்… சொந்த நாட்டு மக்களால் மறக்கப்பட்டவர்” (“Feared by the British… Forgotten by his countrymen”) என்ற அழுத்தமான வரிகளுடன் இக்கதைக்களம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

‘GDN’ திரைப்படக் குழுவினர் படத்தின் விளம்பரப் பணிகளை ஜி. டி. நாயுடுவின் சொந்த ஊரான கோயம்புத்தூரிலேயே மிக பிரம்மாண்டமாகத் திட்டமிட்டுள்ளனர். ஜூலை 4-ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெறவிருக்கும்  பிரத்யேக ‘டிரெய்லர்’ நிகழ்ச்சி , படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஜி. டி. நாயுடுவின் மோட்டார் வாகனத் துறை மீதான காதலைப் பிரதிபலிக்கும் விதமாக, மதிய வேளையில் கோவையில் உள்ள புகழ்பெற்ற ‘காரி மோட்டார் ஸ்பீடுவே’ பந்தய டிராக்கில் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு கார் காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் (Track Day Experience) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அன்று மாலை 6:00 மணி முதல் 6:45 மணி வரை அதிகாரப்பூர்வ ‘GDN’ திரைப்பட டிரெய்லர் வெளியிடப்படவுள்ளது.

‘ராக்கெட்ரி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் மாதவன், இதில் ஜி. டி. நாயுடுவாக வித்யாசமான தோற்றங்களில் வாழ்ந்துள்ளார். வயதான தோற்றத்திற்காக அவர் மேற்கொண்ட உடல் மற்றும் ஒப்பனை மாற்றங்கள் படத்தின் முக்கிய பலமாக இருக்கும். இப்படத்தில் மாதவனுடன் இணைந்து பிரியாமணி, சத்யராஜ், ஜெயராம், தம்பி ராமையா, துஷாரா விஜயன், வினய் ராய் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘GDN’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ஜூலை 17-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.