கருப்பு திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு, நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தை ‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற இந்தியத் திரையுலகையே வியக்க வைத்த மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படங்களைத் தயாரித்த விஜய் கிரகந்தூரின் ஹொம்பாலே பிலிம்ஸ் (Hombale Films) நிறுவனம் மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.
‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல் மீண்டும் இத்திரைப்படத்தின் மூலம் இணைகிறார்கள். அனைத்துத் தரப்பு சினிமா ரசிகர்களும் ரசிக்கும்படியான கதைக்களத்துடன் இத்திரைப்படம் உருவாகவுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கவனம் ஈர்த்த கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் போன்ற சிறந்த கலைஞர்கள் நடிக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.
தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்இத்திரைப்படம் குறித்துப் பேசிய ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகந்தூர்,
“சூர்யா அவர்களுடன் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் பெருமிதம் கொள்கிறது. அழுத்தமான கதைக் களத்தில் நட்சத்திரங்களை வெற்றிகரமாகக் கையாண்டு வெற்றி தரும் இயக்குநர் ஞானவேல், சூர்யா ஆகிய இருவரையும் எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. மக்களின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு, அதே தொலைநோக்கு சிந்தனை கொண்ட இவர்களுடன் இணைந்திருப்பதால், ரசிகர்கள் இத்திரைப்படத்தில் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்'” என்று கூறினார்.
இத்திரைப்படத்தின் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், வரும் ஜூலை மாதம் 22-ம் தேதி முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.