சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக S. வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், ‘குட்நைட்’ படப்புகழ் மணிகண்டன் கதாநாயகனாக நடித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில், சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், “ஜெய ஜெய ஜெய ஹே” புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.
ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் தன்மானத்திற்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களே இத்திரைப்படத்தின் மையக்கரு. படம் குறித்து இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி மேலும் பகிர்ந்திருப்பதாவது, “இந்தப் படம் ஃபேமிலி காமெடி டிராமாவாக உருவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஆர்மபித்த படத்தை இப்போது மார்ச் மாதம் முடித்திருக்கிறோம். இரண்டு ஷெட்யூலாக 65 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இத்திரைப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் மார்க்கெட், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் என லைவ்வாக நிறைய இடங்களில் படமாக்கினோம்” என்றார்.
இக்கதை நம் குடும்பங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளின் அடிப்படையில் நகைச்சுவையும் சுவாரசியங்களும் நிறைந்ததாக அமைந்திருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.