ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய சாம் ஆண்டன் ‘4 Monkeys Studios’ நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கியுள்ள படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்து, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்தை 300 கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘லிப்ரா புரடக்ஷன்’ சார்பாக ரவீந்தர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ளார்.
சின்ன, சின்ன காமெடி வேடங்களில் கலக்கி வந்த யோகி பாபு, இந்தபடத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அவருடன் சார்லி, மனோபாலா, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோருடன் ஹாலிவுட் நடிகை எலிசா எர்கார்ட்(Elyssa Erhadt) நடித்துள்ளார். எப்படி இருக்கிறார் கூர்கா?
நேபாளத்திலிருந்து வந்த கூர்கா ஒருவர் வடசென்னையில் பெர்மனன்ட்ட… டேரா போட்டதின் விளைவில் உருவானவர் தான் யோகி பாபு. தங்களது குலத்தொழிலை செய்ய விருப்பமில்லாமல் போலீஸ் ஆவதற்கு முயற்சி செய்கிறார். ஆனால் தகுதியில்லை என துரத்தி அடிக்கப்படுகிறார். லஞ்சம் கொடுத்தாவது போலீஸில் சேர துடிக்கும் அவருக்கு பணம் தேவைப் படுவதால் மனோபாலா நடத்தி வரும் செக்யூரிட்டி ஏஜென்சியில் சேரும் அவருக்கு அமெரிக்க எம்பெஸியின் உயரதிகாரி எலிசா எர்கார்ட்(Elyssa Erhadt) மேல் காதல்!
இந்நிலையில் யோகிபாபு வேலை செய்யும் ஒரு ஷாப்பிங்க் மாலில் தீவிரவாதிகள் புகுந்து கொண்டு அதை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுகின்றனர். அமெரிக்க எம்பெஸியின் உயரதிகாரி எலிசா எர்கார்ட்(Elyssa Erhadt), போலீஸ் உயரதிகாரிகள் குடும்பத்தினர் உட்பட பல வி.ஐ.பி.க்கள் மாட்டிக்கொள்ள யோகி பாபு அவர்களை காப்பாற்றுவது தான் கூர்கா படத்தின் கலகல காமெடிக் கலட்டா திரைக்கதை, க்ளைமாக்ஸ்!
நடிகர்கள் சிவக்குமார், ரஜினி, விஷால், தனுஷ், சிம்பு மற்றும் எச்.ராஜா, நித்தியானந்தா, பிரபல டிவி சேனல் ஓனர், ஆளும் தரப்பு உள்பட எல்லோரையும் வம்புக்கிழுத்து ரசிகர்களை சிரிக்க வைக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன். கூர்க்கா இனத்தினருக்கு பெருமை சேர்ப்பதாக எடுக்கப்பட்டுள்ள படத்தில் அவர்களை இழிவு படுத்தியும் இருக்கிறார்கள். (‘கூர்க்கா பொண்டாட்டி ஓடிப்போன க்கூட காவல் காப்பதில் வல்லவர்களாக இருப்பார்களாம்’ அப்படியா சாம் ஆண்டன்?)
முதல் பாதியில் படம் அப்படி இப்படி நெளிய வைத்தாலும் இரண்டாம் பகுதி ஆறுதல் படுத்துகிறது. பாடல், பின்னணி இசை அமைத்துள்ள ராஜ் ஆர்யன் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. கேமரா மேன் கிருஷ்ணன் வசந்த் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.
எதை பற்றியும் கவலைப்படாமல் சினிமா சுதந்திரத்தை மீறி எடுக்கப்பட்ட கூர்கா படத்தை ரசிகர்களும் அதே மாதிரி ரசித்தால் குழந்தைகளுடன் பெரியவர்களும் கவலைகளை மறந்து வாய்விட்டுச் சிரிக்கலாம்.
***தயாரிப்பாளருக்கு.. 3.5 கோடி செலவில், உலகம் முழுவதும் ஒரு விமர்சகரை விளம்பரப்படுத்திய உங்க கைங்கர்யத்துக்கு வாழ் நாள் நன்றிக் கடன் பட்டிருக்கிறார் அந்த விமர்சகர்!!!