குருமூர்த்தி – விமர்சனம்!

நட்டி (நட்ராஜ்), பூனம் பாஜ்வா, ராம்கி, ரவிமரியா, மனோபாலா,  மொட்டை ராஜேந்திரன்,  ஜார்ஜ் , பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா,யோகிராம், சஞ்சனா சிங், அஸ்மிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், குருமூர்த்தி. கே.பி. தனசேகர் இயக்கியுள்ள இப்படத்தை, ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில், சிவ சலபதி மற்றும் சாய் சரவணன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

தொழிலதிபர் ராம்கி, 5 கோடி ரூபாய் கருப்பு பணத்துடன் காரில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. அதன் காரணமாக மாத்திரை சாப்பிடுவதற்காக  வழியில் இருக்கும் கடையில் இறங்கி தண்ணீர் வாங்குகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரிடமிருந்த 5 கோடியை ஒருவர் திருடுகிறார். அவரிமிருந்து இன்னொருவர் திருடுகிறார். இப்படியே அந்த 5 கோடி பணப்பெட்டி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி செல்கிறது. இது குறித்த போலீஸ் விசாரணைக்கு பின் உயிரிழக்கும் ராம்கி, ஆவியாக அந்த பணப் பெட்டியை பின் தொடர்கிறார்.

இன்ஸ்பெக்டர் நட்டி தலைமையில் மனோபாலா, ரவிமரியா, ஆகியோர் பணப் பெட்டியை தேடிக் கண்டுபிடிப்பதே குருமூர்த்தி படத்தின் கதை!

ராம்கி வந்து போகிறார்!

நட்டி நட்ராஜ், போலீஸ் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. ஜீப்பில் சுற்றிச் சுற்றி வந்தாலும் விசாரணையில் எந்தவிதமான பரபரப்பும் இல்லை. இவரது மனைவியாக நடித்திருக்கிறார், பூனம் பாஜ்வா. ஒரு பாடல் காட்சியில் மட்டும் கவனம் பெறுகிறார்.

சஞ்சனா சிங், அஸ்மிதா ஆகிய இருவரும் முழுக்க முழுக்க கவர்ச்சிக்காக மட்டுமே பயன் படுத்தப்பட்டுள்ளனர்.

காவலர்களாக நடித்திருக்கும் ரவி மரியா, மனோ பாலா ஆகிய ஒரு சில இடங்களில்  மட்டுமே சிரிக்க  வைக்கிறார்கள்.

சத்யதேவ் உதயசங்கரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை!

ஒளிப்பதிவாளர் தேவராஜ் ஒளிப்பதிவில். பாடல் காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்கிறது.

சொதப்பல் திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கும் கே.பி.தனசேகர்,  ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை!