நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் – விமர்சனம்!

‘லைகா புரடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கும் படம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இதில் சச்சு, வடிவேலு, ஆனந்த்ராஜ், ராவ் ரமேஷ், முனிஷ்காந்த், வேல.ராமமூர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, ஷிவானி, ஷிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாகியிருக்கும், இந்தப்படம் எப்படியிருக்கிறது?

வேல.ராமமூர்த்தி குழந்தை வரம் வேண்டி, ஒரு பைரவர் கோவிலில் குடும்பத்துடன் தங்குகிறார். அப்போது அங்கு பசியுடன் வரும் ஒரு ‘சாது’வின் பசியை அறிந்து அவருக்கு உணவளிக்கிறார். பசியாறிய சாது அவரின் குறைகளை கேட்டுவிட்டு, வேல.ராமமூர்த்திக்கு ஒரு குட்டி நாயினை பரிசளித்து, அந்த நாயின் அதிர்ஷடம் பற்றியும் கூறுகிறார்.

சாது கூறியபடியே வேல.ராமமூர்த்திக்கு வடிவேலு குழந்தையாக பிறப்பதுடன் பெரும் செல்வந்தராகவும் ஆகிறார். இந்நிலையில் அந்த அதிர்ஷ்ட நாயினை பராமரிக்க ராவ் ரமேஷ் நியமிக்கப்படுகிறார். சில வருடங்கள் கழித்து நாயின் அதிர்ஷடம் பற்றி தெரிந்து கொண்ட ராவ் ரமேஷ் அந்த நாயினை திருடி சென்றுவிடுகிறார். வேல.ராமமூர்த்தி குடும்பம் ஏழ்மை நிலைக்கு செல்கிறது. பிழைப்புக்காக வடிவேலு நாய்களை திருடி விற்கிறார்.

வடிவேலுக்கு சொந்தமான நாய் திரும்ப கிடைத்ததா, இல்லையா? என்பதே நாய் ‘சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் சுவாரஷ்யமற்ற, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார், வடிவேலு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அவரை திரையில் பார்த்தவுடனே சிரித்து விடுவார்கள். அது இந்தப்படத்தில் பெரிய மிஸ்ஸிங்!  படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை  ரசிகர்களை  சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். ஆனால் சிரிப்பு வரவில்லை. வடிவேலுவை பார்த்தாலும் சிரிப்பு வரவில்லை! அவரது டைலாக்குகளை கேட்டாலும் சிரிப்பு வரவில்லை. ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. காமெடியை எதிர்பார்த்து வந்த ரசிகர்களை சற்றே குஷி படுத்துகிறார், ஆனந்தராஜ்.

விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்கிறது.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், பாடல்களும் காட்சிகளுக்கு பலம் சேர்க்கவில்லை!

வலுவற்ற கதைக்கு, பொருத்தமில்லாத திரைக்கதை அமைத்து ரசிகர்களை ஏமாற்றியதுடன், வடிவேலுவின் சாம்ராஜ்யத்தை, பூஜ்யமாக்கியிருக்கிறார், இயக்குனர் சுராஜ்.