கஸ்தூரி ராஜா, ஈஷா முகம்மது, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ , அனுஸ்ரேயா ராஜன், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள்குமார், ரேகா குமணன், இஸ்மத் பானு, யூடியூபர் கைஜென் மலர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சாகுல் ஹமீது, மாஸ்டர் தீஹான், தீக்ஷா ஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், ஹபீபி. வி. எஸ். முகமத் அமீன் எழுதிய கதைக்கு, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார், மீரா கதிரவன். சாம் சி.எஸ் இசையமைத்திருக்க, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஹபீபி (Habibi), ஹபீப்தி (Habibti) இந்த இரண்டுமே, அரபு வார்த்தைகள். இரண்டும் ஒரே பொருளைத்தான் தருகின்றன. இது அன்பின் மிகுதியால் அழைக்கப்படும் ஒரு சொல். இதற்கான பொருள் ‘அன்பே’ என்று கொள்ளலாம். காதலர்களுக்குள், தம்பதியருக்குள், நெருக்கமான நண்பர்களுக்குள் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆண்களை அழைக்க ஹபீபி. பெண்களை அழைக்க ஹபீப்தி.
1980 களில் தென்காசி, கடையநல்லூரில் வசிக்கும் ஒரு இஸ்லாமியக் கூட்டுக்குடும்பத்தின் தலைவர், (கஸ்தூரி ராஜா) முஹம்மது யூசுப். இவர், தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வந்த கைத்தறி நெசவுத் தொழில் நசிவுறுகிறது. அதனால், அந்த ஊரில் வசிக்கும் பலரும் வேறு தொழிலுக்கும், வேலை தேடி அரபு நாடுகளுக்கும் செல்லத் துவங்குகின்றனர். இந்நிலையில் குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக யூசுப்பின் தம்பியும் அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்கிறார். அடுத்த சில ஆண்டுகளில் குடும்பம் கொஞ்சம் வசதியை பெறுகிறது. அதனால், யூசுப்பின் மகன் (ஈஷா முகம்மது) அபுதாஹிரையும் அழைத்து செல்ல முடிவெடுக்கிறார், ஆஅனால், அபுதாஹிருக்கு குடும்பத்தை பிரிந்து செல்ல மனமில்லை. இந்நிலையில், ( மாளவிகா மனோஜ்) நிலோஃபர் நிஷா மீது, அபுதாஹிருக்கு காதல் உருவாகிறது. அதன் காரணமாக அந்தக் குடும்பம் பல பிரச்சனைகளை சந்திக்கிறது. அவை என்ன என்பது தான், ஹபீபி திரைப்படத்தின் உணர்வுப் பூர்வமான கதை.
1980 – 2023 ஆம் ஆண்டு வரையிலான கதையோட்டத்திற்கு ஏற்றவகையில், நேர்த்தியான திரைக்கதை அமைத்து, அதற்கேற்றபடி அடப்பிடிப்பு தளத்தினை அமைத்த கலை இயக்குநருக்கு பாராட்டுக் கொடுக்கலாம். அனைத்தும் நிஜமான தோற்றத்தினை ஏற்ப்படுத்தியது. நடிகர்களின் நடை உடை பாவனைகளும் அதற்கேற்றபடியே இருப்பதால் அந்த குடும்பத்தின் அருகிலேயே இருந்து பார்ப்பது போன்ற உணர்வினை கொடுக்கிறது. முதல் பாதியில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும் சோர்வைத்தரவில்லை. இரண்டாம் பாதியில் சில உணர்வுப்பூர்வமான காட்சிகளோடு பயனிப்பதால் சுவாரசியம் ஏற்படுகிறது.
யூசுப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கஸ்தூரிராஜா, அபுதாஹிர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஈஷா முகம்மது,
நிலோஃபர் நிஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகா மனோஜ், பர்வீண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனா ஸ்ரீ சுதாகரன், ஷாலியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனு ஸ்ரேயா ராஜன் என ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரங்களாகவே திரையில் தெரிகின்றனர்.
சாம் சி எஸ், காட்சிகளுக்கேற்றபடி இசையமைத்திருக்கிறார். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு சிறப்பு.
குடும்பத்திற்காக பொருளாதாரத்தைத் தேடிச்செல்லும் பல இளைஞர்களின் வாழ்க்கை கனவுகளாகவே கரைந்து போவதை மிக அழகாக படம்பிடித்திருக்கிறார், இயக்குநர் மீரா கதிரவன்.
‘ஹபீபி’ – ஹயாத்!