ஹரீஷ் கல்யான் – அதுல்யா ரவி நடிக்கும் ஆக்சன் திரைப்படம்!

ஹரீஷ் கல்யாணின் அதிதீவிர ரசிகர்களுக்கு ஒரு அற்புத செய்தி, நடிகர் ஹரீஷ் கல்யாணின் சாக்லேட் பாய் ரொமாண்டிக் ரோல்களை காதலிக்கும் ரசிகர்கள், அவரை கரடுமுரடான அதிரடி பாத்திரத்தில் பார்க்க ஆவலாக இருந்தனர. அந்த வகையில் தனது மென்மையான மனம் வருடும் காதல் திரைப்படங்களால் ரசிகர்களிடம் புகழைக்குவித்துள்ள நடிகர் ஹரீஷ் கல்யாண், தனது அடுத்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தற்போதைக்கு “PRODUCTION NO 5” என அழைக்கப்படும் இப்படம் காதல் ஆக்சன் டிராமா திரைப்படமாக உருவாகவுள்ளது. SP CINEMAS நிறுவனம்  THIRD EYE ENTERTAINMENT நிறுவனத்துடன் இணைந்து  தயாரிக்கும் இப்படத்தை (ஜீவி பிரகாஷ் நடித்த அடங்காதே புகழ் )சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். அதுல்யா ரவி நாயகியாக நடிக்கிறார். நடிகர் யோகிபாபு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். D.இமான் இசை படத்தின் மிகமுக்கிய அம்சமாக இருக்கும்.

இத்திரைப்படம் இன்று ( டிசம்பர் 13, 2021 ) சென்னையில் எளிமையான சடங்குகளுடன் இனிதே துவங்கியது. இயக்குநர் வெற்றிமாறன் படத்தின் முதல் ஷாட்டுக்கு கேமராவை ஆன் செய்து துவக்கி வைத்தார். விஜய் சேதுபதி, ஜீவி பிரகாஷ், ஐஷ்வர்யா ராஜேஷ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரெக்க மற்றும் வா டீல் படப்புகழ் இயக்குநர் ரத்ன சிவா, எங்கிட்ட மோதாதே படப்புகழ் ராமு செல்லப்பா டோரா படப்புகழ் இயக்குநர் தாஸ் ராமசாமி உட்பட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படம் வெற்றிபெற படக்குழுவினரை வாழ்த்தினர்.

வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, வட சென்னை பகுதிகளிலும அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு நடைபெறவுள்ளது. ஹரிஷ் கல்யாண் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படத்தில்  நடிப்பது இதுவே முதல் முறை, மேலும் அவர் இப்படத்தில் வழக்கத்திற்கு மாறாக முரட்டுத்தனமான தோற்றத்தில் தோன்றவுள்ளார்.