சிறப்புப் பிரிவின் கீழ் இயங்கும் காவல்துறை அதிகாரி நானி, ஒரு கொடூரமான கொலை வழக்கினை விசாரிக்கிறார். இதற்கிடையே, பச்சிளம் குழந்தை ஒன்றும் கடத்தப்படுகிறது. இந்த இரு வழக்கினையும் தனது குழுவோடு இணைந்து விசாரித்து வருகிறார்மொரு நாள் நானி, காட்டுப்பகுதியில் ஒருவனை தலைகீழாக தொங்கவிட்டு கழுத்தை அறுத்து கொலை செய்வதோடு, அதை வீடியோவில் பதிவு செய்கிறார். இதை, அவரை பின் தொடரும் மற்றொரு பெண் போலீஸ் அதிகாரி கண்டுபிடித்து, துப்பாக்கி முனையில் நானியை கைது செய்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? எனபது தான், ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ படத்தின கதை.
காவல்துறை அதிகாரியாக, நானி படம் முழுவதும் கம்பீரமாக வலம் வருகிறார். அனைத்து காட்சிகளிலும் ரசிகர்களை கவர்ந்து விடுவது நிச்சயம். சண்டைக்காட்சிகளில், வெறிபிடித்தவராக ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில், தியேட்டரையே ரத்தத்தில் நனைத்து எடுத்த மாதிரியாக ரத்தம் கொப்பளிக்கும் காட்சிகள். இது வன்முறை விரும்பும் பார்வையாளர்களை கவரும். காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.
ஸ்ரீரிநிதி ஷெட்டியும் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவருக்கும் நானிக்குமான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக ட்ரெயினில் நடக்கும் காட்சிகள் ரசனையானவையாக இருக்கிறது. திரைக்கதையில் கடைசி வரை இவர் பயனிக்கிறார்.
சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.
படத்தின் பெரும்பலமாக இருக்கிறார், ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ்.
இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை, திரைக்கதையை மேலும் பரபரப்பாக்குகிறது.
காட்சிகளை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் தொகுத்திருக்கிறார், படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ். குறிப்பாக நானி செய்யும் கொலைக்காட்சிகளும், மற்றவர்கள் செய்யும் கொலைக்காட்சிகளும் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது!
பார்வையாளர்கள் சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கும்படியான, வன்முறையான, கொடூரக்காட்சிகளை ரசிப்பவர்களுக்கு ஏற்றபடி, ஒரு சைக்கோ க்ரைம் சஸ்பென்ஸ் படத்தினை கொடுத்துள்ளார், எழுதி இயக்கியிருக்கும் சைலேஷ் கோலானு.
மொத்தத்தில், ‘ஹிட் – த தேர்ட் கேஸ்’ வன்முறை வெறியாட்டம்!