‘சுமோ’ – விமர்சனம்!

சிவா, (Surf board) கடல் அலைகள் மீது சவாரி செய்யும் விளையாட்டு வீரர். வழக்கம்போல் ஒரு நாள் கடலுக்கு செல்கிறார். அப்போது, சுய நினைவை இழந்த, வேறு ஒரு நாட்டினைச் சேர்ந்த ஒருவர் கரை ஒதுங்கி கிடக்கிறார். சிவா அவரை காப்பாற்றுகிறார். கடலில் அடித்துவரப்பட்டு கரை ஒதுங்கிய அந்த நபருக்கு எதுவும் நினவில்லை. தான் யார் என்பதையே மறந்த நிலையில் இருக்கிறார். இதனால் வேறு வழியின்றி சிவாவே அவரை பராமரித்து வருகிறார். சில நாட்களுக்குப்பிறகு சிவா பராமரித்து வருபவர், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த சுமோ மல்யுத்த வீரர், என்பது தெரிய வருகிறது. அதன் பிறகு சிவா, ஜப்பானுக்கு அனுப்ப முயற்சிக்கிறார். அதை, ஒரு குமபல் தடுக்கிறது. யார்? எதற்காக தடுக்கிறார்கள். அந்த வீரருக்கு சுய நினைவு வந்ததா, இல்லையா? என்பதே ‘சுமோ’ படத்தின் கதை!

‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ சிவா, வழக்கம்போல் தனது முத்திரை பதித்த நடிப்பினை வாரி வழங்கியிருக்கிறார்! ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். பிரியா ஆனந்துடனான காதல்காட்சிகளில், காதல் ரசம் சொட்டச் சொட்ட நடித்திருக்கிறார்!? நல்ல வேளையாக இருவருக்குமான காட்சிகள் அதிகம் இல்லை!

நாயகி பிரியா ஆனந்த். கவர்ச்சிக் காட்டத் தயங்காத நடிகை. அழகும் திறமியும் மிக்க அவரை சரியாக பயன்படுத்தவில்லை. என்பது நன்கு தெரிகிறது.

யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ், நிழல்கள் ரவி, சேத்தன், ஸ்ரீநாத், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரை வைத்துக்கொண்டு காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள். காமெடி வரவில்லை. கடியே மிச்சம்!

நிவாஸ் கே.பிரசன்னா இசையில், பிள்ளையார் பாடலும் பின்னணி இசையும் ஓகே!

ஒளிப்பதிவு, ராஜீவ் மேனனா? தெரியவில்லை! ஆனால், அவருடைய பெயர் டைட்டிலில் இடம்பெறுகிறது.

‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ சிவாவே , சுமோ படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியிருக்கிறார். பெரிதாக கவரவில்லை! திரைக்கதை தான் மிகப்பெரிய பலவீனம்.

கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ்.பி.ஹோசிமின் தடுமாறியிருக்கிறார்.

ஓமக்குச்சி நரசிம்மனை சுமோ வீரர் என்றால் ஏற்கமுடியுமா? அப்படித்தான் இருக்கிறது இந்த ‘சுமோ’.