கொடூரத்தை ரசிப்பவர்களுக்கு பிடிக்கும்! – ‘இறைவன்’ விமர்சனம்!

காவல் துறையில் வேலை செய்யும், போலீஸ் உதவி கமிஷ்னர் ஜெயம் ரவியும், நரேனும் நண்பர்கள். இவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு, கொடூரமாக வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். இந்த கொடூரக் கொலைகள் தொடர்ச்சியாக நடக்கிறது. இதனால் ஒட்டுமொத்த காவல் துறையும், அதிர்ச்சிக்குள்ளாகிறது. அதைத் தொடர்ந்து, ஜெயம் ரவி சைக்கோ கொலைகாரனான ராகுல் போஸை கைது செய்ய முயற்சிக்கிறார். அப்போது நடக்கும் மோதலில் நரேன் கொல்லப்படுகிறார். நண்பனை இழந்த ஜெயம் ரவி போலீஸ் வேலைக்கு முழுக்கு போடுகிறார்.

இந்நிலையில், ஜெயம் ரவிக்கு நெருக்கமானவர்கள் தொடர்ச்சியாக குறி வைத்து கொல்லப்படுகிறார்கள். இதற்கு பிறகு என்ன நடந்தது? என்பது தான், இறைவன்’ படத்தின் கதை.

ஜெயம் ரவி காவல் துறையில் பணிபுரிபவர்களின் மன நிலையை, வித விதமான முகபாவனைகள் மூலம், கதாபாத்திரம் சந்திக்கும் பல்வேறு சூழல்களை வெகு நேர்த்தியாக பிரதிபலிக்கிறார்.

ஜெயம் ரவியை காதலிக்கும், நரேனின் தங்கையாக நயன்தாரா. வந்து… போகிறார்… நரேன், ஒரு சில காட்சிகள் தான் ஆனால் ஓகே!

சைக்கோ சீரியல் கில்லராக ராகுல் போஸ்! டெரரோ.. டெரர்! மிரட்டியிருக்கிறார்.

சஸ்பென்சாக வரும் வினோத் கிஷன், ஓவராக்டிங்….

மற்றபடி ஆஷிஷ் வித்யார்த்தி, சார்லி, விஜயலட்சுமி, சார்லி இவர்கள் யாரும் பெரிதாக கவரவில்லை என்றாலும், குறை சொல்ல முடியாதபடி நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா காட்சிகளுக்கேற்ப இசையமைத்திருக்கிறார். டெரர் காட்சிகள் இவரது இசையால் மேலும் டெரராக, இருக்கிறது. இதற்கு நேரெதிராக பாடல்கள்.

திகில் பின்னணி இசையைப் போலவே, ஒளிப்பதிவாளர் ஹரி.கே.வேதாந்த்தின் ‘திகில்’ ஒளிப்பதிவு, சிறப்பாக இருக்கிறது.

பல குறைகள் இருந்தாலும், சைக்கோ,கொடூரக் கொலைகாரன் செய்யும் கொலைகளை, எந்த சமரசமும் செய்யாமல் காட்சிப் படுத்தியிருக்கிறார், இயக்குனர் அஹமத்.

கொடூரமான, சைக்கோ படம் விரும்பியா நீங்கள்? அப்போ ‘இறைவன்’ உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!