‘இறுகப்பற்று’ – விமர்சனம்!

விதார்த், திருமணத்திற்கு பின்னர், தனது மனைவி அபர்ணதி குண்டாக இருப்பதால், அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். ஆனால் அபர்ணதி அவரை விட்டு பிரிய மறுக்கிறார். காதல் திருமணம் செய்து கொண்ட ஶ்ரீ, தனது மனைவி சானியா, முன்னர் போல் தன்மீது ஈர்ப்பாக இல்லாததால் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு, விவாகரத்து செய்யும் முடிவிற்கு செல்கிறது. இந்த இரண்டு தம்பதியினரும் உளவியல் நிபுணர் ஷ்ரத்தா ஶ்ரீநாத்தை சந்திக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு கவுன்சிலிங் செய்து வரும் நிலையில், விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஶ்ரீநாத் தம்பதியிடையே கருத்து வேறு பாடு ஏற்பட்டு ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்படுகிறது.

விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஶ்ரீநாத், விதார்த் – அபர்ணதி, ஶ்ரீ – சானியா, இந்த மூன்று தம்பதியினரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே ‘இறுகப்பற்று’ படத்தின் பார்த்து ரசிக்க வேண்டிய கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.

விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஶ்ரீநாத், விதார்த் – அபர்ணதி, ஶ்ரீ – சானியா, இவர்களில் அனைவர் மனதிலும் எளிதாக இடம்பிடித்து விடுகிறார், அபர்ணதி.

விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் அவர், வெகு இயல்பான சற்றே வெகுளித்தனம் கொண்டவராக, இயல்பாக நடித்திருக்கிறார். பல காட்சிகளில் சிரிப்பினையும், பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறார். பல காட்சிகளில் கை தட்டல்களை பெறுகிறார். உடம்பை குறைக்க ஜிம்முக்கு செல்லும் காட்சிகள், பல பெண்களுக்கு நினைவூட்டும் காட்சிகளாக அமைந்திருக்கிறது. விதார்த்தும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

எப்போதும் சிரித்த முகமாக, உளவியல் நிபுணராக நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அடுத்தவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்க்கமான முடிவு சொல்லும்போதும், தன்னுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு எடுக்க முடியாமல் சற்று தடுமாறும் போதும், அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு மேலும் வலுவூட்டுகிறார். இவரது கணவராக நடித்திருக்கும் விக்ரம் பிரபு, சிறப்பாக நடித்திருக்கிறார். ஷரத்தா ஶ்ரீநாத் தன்னிடம் இயல்பான முறையினில் அன்பினை வெளிப்படுத்தாமல், செயற்கைத் தனமாக அட்டவணையிட்டு அன்பு காட்டியதை எண்ணி, வருந்தும் காட்சி சூப்பர்.

ஸ்ரீ  – சானியா தம்பதியினரின் நடிப்பையும் குறை சொல்ல முடியாது. இருவரும் கோர்ட்டில் சந்திக்கும் போது, கலங்க வைத்து விடுகின்றனர். தன் தவறை எண்ணி ஶ்ரீ , மனோபாலாவிடம் சொல்லி அழும்போது கண்களை கசிய வைத்து விடுகிறார்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் ஒளிப்பதிவு, ஜஸ்டின் பிரபாகரனின் இசை இரண்டுமே, உணர்ச்சிகரமான பல காட்சிகளை ரசிகர்களிடத்தில் அழகாக கொண்டு சேர்த்து விடுகிறது. அதோடு, படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் இன்றைய சூழலில், ஒரு சின்ன கருத்து வேறுபாடும், அவர்களின் பிரிவுக்கு தூண்டுகோலாய் அமைந்து விடுகிறது அதை தக்க ஆலோசணையின் படி அனுகினால், இனிமையான வாழ்க்கை அமையும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் யுவராஜ் தயாளான்.

தம்பதிகளுக்கு ஆலோசணை சொல்லும், படமாக இருந்த போதும் போரடிக்க வில்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்படியான காட்சியமைப்புகள் சிந்திக்க வைக்கிறது. அதுவே, இப்படத்தின் பெரிய வெற்றி. வயது வித்தியாசமின்றி ‘இறுகப்பற்று’அனைத்து தம்பதிகளுக்குமான படமாக இருக்கிறது..