Jada Movie Review
‘பொயட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரித்துள்ள படம் ‘ஜடா’. அறிமுக இயக்குனர் குமரன் இயக்கியிருக்கிறார்.
சிறந்த கதையம்சம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதிர், கால் பந்தாட்ட வீரராக களமிறங்கியுள்ள ‘ஜடா’ எப்படியிருக்கிறது? பார்ப்போம்.
வடசென்னையில் மிகவும் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிஷோர். அவரைப் போல் கால்பந்து விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து மாநில, தேசிய அளவிலான போட்டிக்கு தயார் செய்து வருகிறார்.
கால்பந்தாட்டத்தை சூதாட்டமாக வைத்து விளையாடும் வில்லன் ஏ.பி.ஶ்ரீதர் கோஷ்டிக்கும், கிஷோருக்கும் மோதல் உருவாகிறது. இதில் 7 பேர் கொண்ட அணிகளுக்குள் போட்டியிட முடிவு செய்கின்றனர். அதில் கிஷோர் மர்மமான முறையில் இறக்கிறார்.
தன்னுடைய ரோல் மாடலாக இருக்கும் கிஷோர் மரணத்திற்கு கதிர் பழி வாங்கினாரா? என்பது தான் ‘ஜடா’ படத்தின் கதை.
அறிமுக இயக்குனர் குமரன் படத்தின் துவக்கத்திலேயே கால்பந்து உருவான கதையை அழகாக விளக்கியிருப்பது சூப்பர். அதிலும் 11 பேர் கொண்ட விளையாட்டிற்கும் 7 பேர் கொண்ட விளையாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கி திகிலூட்டுகிறார்.
வழக்கமான வடசென்னை தாதா கதையாக இல்லாமல், கால்பந்தாட்டத்தில் நடக்கும் சூதாட்டம் அதை சுற்றி நடக்கும் மோதல் என்பது புதிது.
முதல் பாதியில் காதல், கால்பந்தாட்டம், மோதல் என பயணிக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் அமானுஷ்யத்தை நோக்கி பயணித்து எதிர்பார்ப்பையும், திருப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரராக கதிர் நடித்திருந்ததை விட இந்தப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
கதிரின் காதலியாக வரும் ரோஷினி பிரகாஷின் கிளாமர் சொக்கவைக்கிறது. வழக்கம்போல் டூயட் பாடும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஒன்லைன் பஞ்சில் யோகிபாபு சிரிக்க வைக்கிறார்.
‘ஆந்திரா மெஸ்’ படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாக நடித்திருக்கும் ஆர்ட்டிஸ்ட் ஏ.பி.ஸ்ரீதர், பார்வையாலேயே மிரட்டுகிறார். சரியாக இவரை பயண்படுத்தினால் ஒரு டெரர்.. வில்லனாக தமிழ் சினிமாவில் வலம் வருவார்.
கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருக்கும் கிஷோர் சரியான தேர்வு. மனதில் நிறைகிறார்.
சாம் சி.எஸ் அமைத்திருக்கும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. புதிய லொக்கேஷன்களும் அதை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.சூர்யாவும் சூப்பர்.
ஒரு சில இடங்களில் ஏற்படும் தொய்வை சரி செய்து, திரைக்கதையில் இன்னும் விறு விறுப்பை கூட்டியிருக்கலாம்