‘ஜெயிலர் ஜெயித்திருக்கிறார்’ – விமர்சனம்!

ஓய்வு பெற்ற ஜெயிலர், ரஜினிகாந்த். இவரது மனைவி ரம்யா கிருஷ்ணன். இவர்களது மகன் வசந்த் ரவி, நேர்மையான காவல்துறை அதிகாரி. ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.  வசந்த் ரவி, கடத்தல் காரர்களை பிடிப்பதில் முனைப்புடன் இருக்கிறார். இந்நிலையில் அவர் திடீரென மாயமாகிறார். காவல்துறை அவர் கொல்லப்பட்டதாக யூகம் செய்கிறது.

வசந்த் ரவியை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்க ரஜினிகாந்த் முடிவு செய்கிறார். இதனால் அவரது குடும்பம் பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. அமைதியாக வாழ்ந்து வந்த ரஜினிகாந்த் விஸ்வரூபம் எடுக்கிறார்.

இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே இயக்குநர் நெல்சனின் ஃபார்முலாவில் உருவாகியிருக்கும் மாஸ் மசாலா, கமர்ஷியல் என்டர்டெயினர் ‘ஜெயிலர்’ படத்தின் விறு விறுப்பான, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் உடன் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது படத்தின் அந்த அந்த மாநிலங்களில் வசூலுக்கும் உதவி செய்துள்ளது.

வில்லன் கதாபாத்திரத்தில் வரும் விநாயகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன், மிர்னா ஆகியோருக்கான காட்சிகள் மிகக் குறைவு.

படம் முழுக்க பயம் பயம். வசந்த் ரவி முகத்தில் எந்தவொரு உணர்வையும் காட்டாமல் வந்து செல்கிறார். இவர் வில்லன்கள் வலையில் விழ, போதிய காட்சி அமைக்கப் படவில்லை.

தொழில்நுட்ப ரீதியாக குறை சொல்ல எதுவுமில்லை. அனிருத் பாடல்களில் மட்டுமின்றி பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்துள்ளார். செம அலப்பறை.  விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கச்சிதம்.

ரஜினி ரசிகர்கள் விசில் போடும்படியான காட்சிகளுக்குப் பஞ்சமில்லை, ஆனால், ‘மாஸ்’ பஞ்ச் டயலாக் எதுவும் இல்லை. ரம்யா கிருஷ்ணன் போன்ற திறமை வாய்ந்த நடிகைக்குப் போதுமான காட்சிகள் வைக்காமல் விட்டது ஏமாற்றம், தருவதாகவுள்ளது.

“படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் ரஜினியிடம் ‘வயசானாலும் ஸ்டைலும் அழகும் உன்னவிட்டு போகல’ என்று சொல்லும் அளவுக்கு ரஜினி மேக் அப் சரியாக அமையல.. இன்னும் கொஞ்சம் சரியாக செய்திருக்கலாம்.

ஒரு வெற்றி படத்துக்கு என்னென்ன தேவையோ அது எல்லாம்  யோசித்து இருக்கிறார் நெல்சன்.

பேமிலி டிராமாவாக தொடங்கி, அதன் பின் ஆக்சன் களத்தில் படம் குதிக்கிறது. சிவராஜ்குமார் நான்கு அடியாட்களை அனுப்பி வைத்துவிட்டு அமைதியாக கடந்து செல்கிறார். ஜாக்கி ஷெராஃப் ரஜினிக்கு பிளாஷ்பேக் செல்வதற்கு உதவியுள்ளார்.

தமன்னா ஒரு பாடலுக்கு ஆடி  இளைஞர்களையும், பெருசுகளையும் குஷிபடுத்தி விட்டு, காணாமல் போய்விடுகிறார். தெலுங்கு நடிகர் சுனில் காமெடியில் கலக்குகிறார்.

ரஜினிகாந்த் பறந்து பறந்து சண்டை போட முடியாது என்பதை உணர்ந்து தலையசைப்பிலும் கண் அசைவிலும் ஆக்‌ஷன் காட்சியை காட்டியிருக்கிறார் நெல்சன்.

கிளைமாக்ஸ் கட்சியில், விநாயகனை சேரில் நகர்ந்து கொண்டே உதைத்து தள்ளுவது ‘பாட்ஷா’ படத்தில் வந்தது தான். இருந்தாலும் அது ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட்!

அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கும் சண்டை ‘தங்கப்பதக்கம்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை  ஞாபகப்படுத்துகிறது.  மகனை இழந்த தந்தையாக சோகத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி.

குழந்தை ரித்விக் அலப்பறை நன்றாக இருக்கிறது.

போலீஸ் அதிகாரி காணாமல் போனால், இவ்வளவு மெத்தனமாகவா இருப்பார்கள்!? அதுவும் ஒரு  நேர்மையான! போலீஸ் அதிகாரி. அவரை தேடும் காட்சிகள் இல்லாமல் இருப்பது, படத்திற்கு மைனஸ்.

யோகிபாபு கையில் சிலையை வைத்துகொண்டு ஒவ்வொரு வண்டியாக நிறுத்தி விசாரிப்பது, கேலிக்கூத்து!

சுனில் பாபு காட்சிகளில் ஒரு பத்து நிமிடம் கத்தரி போட்டு இருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் இந்த படம் ரஜினிக்கு ஒரு வெற்றிப்படம் தான்! ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

ஜெயிலர், ஜெயித்திருக்கிறார்.