நெகிழ வைக்கும் காதல் கதைகள்! – ‘வான் மூன்று’ – விமர்சனம்!

Vaan Moondru: Casting 

Aaditya Bhaskar, Ammu Abhirami ,Vinoth kishan, Abhirami Venkatachalam, Delhi Ganesh, Leela Samson .

Crew :

Producer – Vinoth Kumar Senniappan, Production – Cinemakaaran, Director – AMR Murugesh ,DOP – Charles Thomas.

 

ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிஷன், அபிராமி வெங்கடாச்சலம், டெல்லி கணேஷ், லீலா சாம்சன் ஆகியோரது நடிப்பில், ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ள படம், ‘வான் மூன்று’. அறிமுக இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ் இயக்கியிருக்கும் இப்படத்தினை, வினோத் குமார் சென்னியப்பன் தயாரித்துள்ளார்.

இருவேறு காதலில் தோல்வியுற்ற ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி இருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்ய, அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இந்த இருவருக்குள் மலரும் காதல்,

அதே ஆஸ்பத்திரியில், மரணத்தின் விளிம்பில் இருக்கும் அபிராமி வெங்கடாச்சலம், அவரது கணவர் வினோத் கிஷன் இருவருக்குமுண்டான காதல்,

வயது முதிர்ந்த டெல்லி கணேஷ், தனது மனைவி லீலா சாம்சனை மரணத்தின் பிடியில் இருந்து மீட்க போராடும் காதல். இப்படி மூன்று, வெவ்வேறு வயதினையுடைய ஆண், பெண் காதலை சொல்லும், ‘வான் மூன்று’ எப்படி இருக்கிறது?

காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற ஆதித்யா பாஸ்கர், வேறு ஒருவருடன் காதலில் தோற்ற அம்மு அபிராமியின் மீது காதல் கொள்வது, முழுக்க முழுக்க பாசத்தை முன்னிறுத்தி காதலை சொல்லியிருப்பது, வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இருவரும் சிறப்பாக தங்களது கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்துள்ளனர்.

வினோத் கிஷன், திருமணமான சில மாதங்களில், தனது காதல் மனைவியை காப்பாற்ற முடியாது என்று தெரிந்தும், டெல்லி கணேஷ் மனைவி லீலா சாம்சனின் மருத்துவ செலவை ஏற்பதன் மூலம் தன்னுடைய இழப்புக்கு ஈடு செய்வதும், வயதான நிலையில் அவர்களுக்குள் இருக்கும் பாசப் பினைப்பை எண்ணி தன்னைத்தானே ஆறுதல் படுத்திக்கொள்வது சிறப்பு. வினோத், அபிராமி அள்வான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கின்றனர்.

வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் வாழும் டில்லி கணேஷ் – லீலா சாம்சன் தம்பதியினர், ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் அன்பு, பொறாமை கொள்ளச் செய்கிறது. மனைவியை காப்பாற்ற டெல்லி கணேஷ் பணம் தேடிச்செல்லும் காட்சிகள், மனம் வலிக்கச்செய்யும். கணவன் மனைவி இருவரும், ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மனமில்லாமல் தவிக்கும் காட்சி, உருக வைக்கிறது. டெல்லி கணேஷ் – லீலா சாம்சன் இருவரும் பண்பட்ட நடிப்பினை கொடுத்து இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் சோதனையான பல காலக்கட்டங்கள் வந்தபோதும் அதை, பக்குவமாக எப்படி எதிர்கொள்கிறோம், என்பதை பொறுத்தே வாழ்க்கை இனிதாய் அமையும். என்ற கருத்தை!? உணரச் செய்திருக்கிறார், அறிமுக இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ்

படம் ஆரம்பம் முதல் இறுதிவரை, மருத்துவமனையில் நடக்கிறது. இருந்தாலும் சலிப்பில்லாதபடி ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ், காட்சிகளை படம்பிடித்துள்ளார்.

காட்சிகளுக்கேற்றபடி ஆர் 2 பிரதர்ஸின், பின்னணி இசை அமைந்திருக்கிறது.

மருத்துவமனை பின்னணியில் சோகமான சூழலில் வெவ்வேறு வயதினருடைய அழகான காதல் கதையைச் சொல்லி நெகிழச் செய்திருக்கிறார், இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ்.