ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் நடந்த ஊழலை கண்டுபிடிக்கும் ராணுவ வீரர் விக்ரம் ரத்தோர் (ஷாருக்கான்), கொடூரமாக சுடப்பட்டு, சுய நினைவை இழந்த நிலையில், ஆற்றில் வீசப்படுகிறார். அவர் உயிர் பிழைத்தாரா, இல்லையா? என்பது தான், ஜவான் படத்தின் விறுவிறுப்பான, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
ஜவான் திரைப்படம், காலம் காலமாக நாம் பார்த்த ராபின்ஹூட் ஸ்டைல் கதை தான். ஆனால், பீரங்கி ஊழல், தரமற்ற புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டால் உயிர்ப்பலி, போன்ற பல உண்மை சம்பவங்களை நினைவுபடுத்துகிறது. படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து, கடைசி வரை பரபரப்பாக நகரும் அடுத்தடுத்த காட்சிகள், ரசிகர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
ஷாருக் கானின் இன்ட்ரோ சீன், மாஸ்! அது, அவருடைய கதாபாத்திரத்தினை பற்றி தெரிந்து கொள்ள, ஆவலை ஏற்படுத்தி விடுகிறது. சீன வீரர்களுடனான சண்டைக்காட்சிகள் உலகத்தரம்! மெட்ரோ ட்ரெயினை கடத்தி விட்டு, எப்படி தப்பிக்கப் போகிறார்கள்? என நம் மனதில் எழும் கேள்விக்கு, முடிந்த வரை லாஜிக்கை காப்பாற்றியுள்ளார், இயக்குநர் அட்லி!
ஷாருக்கான், தந்தை மகனாக நடித்திருக்கும் இருவேறு கதாபாத்திரங்களுக்கு, விக்ரம் ரத்தோர், ஆசாத் ரத்தோர் என பெயரிட்டிருப்பது, கதைக்களத்துக்கு கச்சிதமாக இருக்கிறது. ராணுவத்தில், விக்ரம் ரத்தோர் மிகவும் பரிச்சயம். ஆசாத் என்பதற்கு ‘விடுதலை’ என்றும், பொருள் படும்.
ஷாருக்கான், ஆக்ஷன், எமோஷனல், ரொமேன்ஸ் என எல்லாக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். நயன்தாராவின் மகளுடனான, அப்பா சென்டிமென்ட் காட்சிகள் அருமை! ஹார்ட் ட்ச்சிங்! அதேபோல் துப்பாக்கியின் தரத்தை பரிசோதிக்கும் காட்சியும், அப்போது நடக்கும் வாதமும் ஒரு நேர்மையான ராணுவ வீரரை கண்முன் நிறுத்துகிறார்.
நர்மதா ராய் எனும், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். மகளுக்கு அம்மாவாகவும் நேர்மையான அதிகாரியாகவும் நன்றாகவே நடித்திருக்கிறார். ராஜஸ்தானை வேடமிட்டு கன்டெயினர்களை கடத்தும் காட்சியில் அழகாக இருக்கிறார்.
சர்வதேச ஆயுத வியாபாரியாக, காளி கெய்க்வாட் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி, நடித்திருக்கிறார். அவருடைய ஒப்பனையும் சரியில்லை. நடிப்பும் சரியில்லை! கோயம்பேட்டில் வெங்காய மூட்டையை கடுத்துபவராக தெரிகிறார். அவரது ஒப்பனையிலும், கதாபாத்திரத்திலும் இன்னும் கவனம் சேர்த்திருக்கலாம்.
ஷாருக்கான் – தீபிகா படுகோனே காட்சிகள் தரமானவை! ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு நேர்மையான ராணுவ வீரரின் மனைவியாக சீற்றம் கொள்வதும், மகனை பிரிந்து தூக்கு மேடைக்கு செல்லும் போதும் அவருடைய நடிப்பு ரசிகர்களை கண் கலங்க வைக்கிறது.
லக்ஷ்மி கதாபாத்திரத்தில் பிரியா மணியும், அவருடன் நடித்த சக சிறைவாசிகளும், சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஜவான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு. சீன தீவிரவாதிகள் சண்டையிடும் முதல் காட்சியிலிருந்து, க்ளைமாக்ஸில் இடம் பெறும் ஜெயில் சண்டைக் காட்சிகள் வரை, அனைத்து காட்சிகளும் பிரம்மாண்டமாகவும், அழகாகவும் படமாக்கப்பட்டுள்ளது. அதிலும், ஒரே நேரத்தில் தந்தை மகன் தோன்றும் காட்சியும் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக அனல் அரசு, ஸ்பைரோ ரசாடோஸ், கிரேக் மேக்ரே, யானிக் பென், கெச்சா காம்பக்டீ மற்றும் சுனில் ரோட்ரிக்ஸ் ஆகியோரின் சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. சீன தீவிரவாதிகள் சண்டைக்காட்சி வாய்பிளக்க ரசிக்க செய்யும் அதே நேரத்தில், க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் ட்ரக் சேஷிங் காட்சிகள், அவ்வளவாக ரசிக்கவில்லை!
தென்னிந்திய சினிமாக்களில் மட்டுமே, சமூக பிரச்சனைகளை அதிகம் படமாக்குவார்கள். வட இந்திய படங்களில் அது அரிதானது. ஜவான் படம் பேசும் சமூக பிரச்சனை அரசியல் வட்டாரங்களிலும், அவட இந்திய மக்களிடமும் புதிய பேசு பொருளை உருவாக்கும்.
மகாராஷ்டிராவில், விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டுவருவது, இன்றுவரை மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக மாரத்வாடா, விதர்பா பகுதிகளில் தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகம். இந்தியாவில் விவசாயக்கடனுக்காக அதிகமானோர் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலமும் மகாரஷ்டிராதான்.
இந்த நிகழ்வுகளை முன்னிறுத்தி இயக்குநர் அட்லீ யும், எஸ்.ரமணகிரிவாசனும் அமைத்திருக்கும் திரைக்கதை, வசனம் வீரியமானது. அதிலும் பென்ஸ் கார் – டிராக்டர் ஆகியவைக்கான வட்டி வேறுபாட்டினை விவாதித்திருப்பது, சாமான்ய மக்களிடம் நிச்சயமாக மாற்றத்தினை உருவாக்கும். க்ளைமாக்ஸில் தேர்தல் ‘வாக்கு’ குறித்து பேசியிருப்பது வட மாநிலங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.
ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் பாஷா ஷாருக்கான், அரசியலில் சலசலப்பினை ஏற்படுத்தியிருக்கிறார்.
பாக்யராஜ், பிரபுதேவா, முருகதாஸ் ஆகியோரை தொடர்ந்து, இயக்குநர் அட்லீ ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
தொடர் வெற்றி கொடுத்துவரும் அட்லீக்கு, ‘ஜவான்’ படமும் வெற்றியே!