மன உளைச்சல் போலீஸூம் சாமானியனும் – ‘நூடுல்ஸ்’ விமர்சனம்!

Noodles Movie Review

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், வெளியான ‘அருவி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர், மதன் தக்‌ஷினாமூர்த்தி. தொடர்ந்து, கர்ணன், அயலி, துணிவு, அயோத்தி, பம்பர், மாவீரன் என பல படங்களில் நடித்த அவர், ‘நூடுல்ஸ்’ படம் மூலம் இயக்குநராகி இருக்கிறார்.  இப்படத்தினை ‘ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ்’ சார்பில், பிரக்னா அருண்பிரகாஷ் தயாரித்துள்ளார். ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார். வரும் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நூடுல்ஸ் திரைப்படத்தில் ஹரீஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், ஆழியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

படத்தின் ஒளிப்பதிவை டி.வினோத் ராஜா, படத்தொகுப்பை சரத் குமார் கையாண்டுள்ளனர்.

படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை எம்.கே.ரமேஷ் கிருஷ்ணன் அமைத்துள்ளார்.

இரவு நேரத்தில், ஒரு அபார்ட்மென்ட் குடியிருப்பில் வசிப்பவர்கள், மொட்டை மாடியில் அந்தாக்‌ஷரி விளையாடுகிறார்கள். அப்போது அங்கே வரும் இரவு நேர ரோந்து போலீஸார், அபார்ட்மென்ட் வாசிகளை களைய சொல்ல, இன்ஸ்பெக்டர் மதனுக்கும் அபார்ட்மென்டில் வசிக்கும் ஹரிஷ் உத்தமனுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அது இன்ஸ்பெக்டர் மதனின் ‘ஈகோ’ ட்ரிக்கர் செய்யப்பட, மொத்த அபார்ட்மென்ட் வாசிகளும் அவரிடம் வசமாக சிக்குகிறார்கள்.

சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல், நிதானமின்றி செயல்படும் போது ஒரு சின்ன விஷயம், எப்படி பெரிய சிக்கலை உருவாக்குகிறது, என்பது தான், பல்ஸை எகிற வைக்கும் ‘நூடுல்ஸ்’ படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

ஒரு சின்னக் கதையினை, பரபரப்பான திரைக்கதையில் சொன்ன விதத்தில், இன்டிபென்டன்ட் ஃபிலிம் மேக்கராக, இயக்குநர் மதன் தக்‌ஷிணாமூர்த்தி வியக்க வைத்திருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரம் நூடுல்ஸ் திரைப்படம், பார்ப்பவர்களை பதற்றத்துடனேயே வைத்திருக்கிறது. க்ளைமாக்ஸ், பதற்றத்திலிருந்து வெளியேற்றி சிரிக்க வைக்கிறது.

நூடுல்ஸ் படத்தின், முதன் முழு வெற்றி, ஹரிஷ் உத்தமனின் சிறப்பான நடிப்பு தான். அவருடைய முகபாவமும், அவர் பேசும் வசனமும் அவரை தொற்றிக்கொண்ட பதட்டமும், படபடப்பும் நம்மை தொற்றிக்கொள்கிறது. சவாலான கதாபாத்திரத்தினை எளிதாக உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

ஹரிஷ் உத்தமனின் கதாபாத்திரத்திற்கு, வலு சேர்ந்தாற் போல் அவரின் மனைவியாக நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமாரின் நடிப்பு அமைந்திருக்கிறது. இவர்களின் மகளாக நடித்திருக்கும் சிறுமி ஆழியாவின் நடிப்பும் கூட கவனிக்கதக்க வகையில் இருக்கிறது.

அபார்ட்மென்ட் குடியிருப்புவாசிகளாக நடித்திருக்கும் திருநாவுக்கரசு, அவரது மனைவி ஜெயந்தி, மஹினா, அலட்டல் வக்கீலாக நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து, போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் ஷோபன் மில்லர், என படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும், திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். அதிலும்,  திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் மதன் வீட்டினுள்ளே இருப்பது தெரியாமல், அவரை கிண்டல் செய்தபடி ஜம்பமாக உள்ளே வந்து, பின்னர் பம்முவது சூப்பர். அதே போல் வக்கீலாக நடித்திருப்பவரும் சிரிப்பினை வரவழைக்கிறார்கள்.

அதிகப்படியான லொக்கேஷன்கள் இல்லாமல் ஒரு சிறிய வீட்டினுள்ளே படம் முழுவதையும் படமாக்கியிருக்கிறார்கள். இதில் ஒளிப்பதிவாளர் டி.வினோத் ராஜா பங்கு மிகுந்த பாராட்டுதல்களுக்கு உட்பட்டது. படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறது.

காட்சிகளுக்கு ஏற்றபடி ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தொகுப்பாளர் சரத்குமாரின் பணியும் சிறப்பு.

இன்ஸ்பெக்டராக நடித்து ‘கிலி’ ஏற்படுத்திய மதன், இயக்குநராக முதல் படத்திலேயே வெற்றி பெற்றிருக்கிறார்.