‘ஜோஷ்வா’ : இமைபோல் காக்க – விமர்சனம்!

வருண், ராஹேய், திவ்யதர்ஷினி, கிட்டி, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், லிஸி ஆண்டனி, விசித்ரா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கௌதம் வாசுதேவ் மேனன், எழுதி, இயக்கியிருக்க, எஸ் ஆர் கதிர் மற்றும் ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ளனர். கார்த்திக் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு ஆண்டனி. ‘வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ சார்பில், ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் வெளிவந்துள்ளது.

ஜோஷ்வா (வருண்), கூலிக்கு கொலை (CONTRACT KILLER) செய்யும் இண்டர்நேஷனல் குற்றவாளி. ஒரு கொலை செய்யும் போது, அமெரிக்க வழக்கறிஞர் குந்தவியை (ராஹேய்), கண்டவுடன் காதல் கொள்கிறார். இருவரும் காதலில் திளைத்து, ஒன்று கலக்கின்றனர். குந்தவிக்கு ஜோஷ்வா கூலிக்கு கொலை செய்பவர், எனத் தெரிய வருகிறது. இதனால், ஜோஷ்வாவிடமிருந்து குந்தவி விலகுகிறார். இதன் பிறகு குந்தவியை கொலை செய்ய, மெக்சிக்கோ போதைப்பொருள் மாஃபியா தலைவனிடமிருந்து (drug cartel leader in mexico), வருணுக்கு அழைப்பு வருகிறது. ஜோஷுவா அதை மறுப்பதோடு, குந்தவியைக் காப்பாற்ற முயற்சிக்கிறான். இதனால் இருவரையும் கொலை செய்ய மாஃபியா குமபல் முயற்சிக்கிறது. இதன் பிறகு, என்ன நடந்தது? என்பதே, ‘ஜோஷ்வா’ :  இமைபோல் காக்க. படத்தின், நான் ஸ்டாப் ஆக்‌ஷன், டிராமா திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

ஜோஷூவா கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார், வருண். அவருடைய உடல்வாகு, தோற்றம், வசனம் பேசும் விதம் என அனைத்தும், கதாபாத்திரத்தினை உயர்த்தி பிடித்திருக்கிறது. சண்டைக்காட்சிகளில் அவர் காட்டும் வேகமும், ஸ்டைலிஷும் அவரை ரசிக்க வைக்கிறது. அவருக்கும் ராஹேய்க்குமான நெருக்கமான காட்சிகளை இன்னும் வைத்திருக்கலாம்! நன்றாக இருக்கிறது. தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் நிர்பந்தத்தால், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தவிர்த்திருப்பாரோ!? வருணின் ஸ்கிரீன் பிரசென்ஸ் சூப்பர்!

அறிமுக கதாநாயகியாக ராஹேய், நான் ஸ்டாப் ஆக்‌ஷன் படத்தில், ஒரு கதாநாயகிக்கு நடிப்பதற்கு என்ன வாய்ப்பு கிடைக்குமோ, அது கிடைத்திருக்கிறது. மோசமில்லை! என்ற அளவிற்கு நடித்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியே அதுக்கு சாட்சி!

கூலிக்கு கொலை செய்யும், சர்வதேச ஒருங்கிணைப்பாளராக திவ்யதர்ஷினி, சென்னை லோக்கல் தாதாவாக, மன்சூர் அலிகான். அவருக்கு, கையாளாக கிருஷ்ணா. மன்சூர் அலிகான் மனைவியாக விசித்ரா, சஸ்பென்ஸாக வரும் கிட்டி, ஆண்டனி லிஸி என, அனைவரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

எஸ் ஆர் கதிர் மற்றும் ஆண்டனி இருவரின் ஒளிப்பதிவும், ‘ஜோஷ்வா’ படத்தின் பெரும்பலமாக இருக்கிறது. சவாலான சேஷிங் காட்சிகளிலும், மிகக் குறுகலான இடங்களிலும், அழகாக படம்பிடித்துள்ளனர். அதோடு, பெரும்பாலான க்ளோசப் காட்சிகள், ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவின் தரத்தினை உயர்த்திபிடிக்கும், ஆண்டனியின் எடிட்டிங், சூப்பர்!

இசையமைப்பாளர் கார்த்திக், தன்னால் முடிந்தவரை காட்சிகளின் விறுவிறுப்பினை கூட்டியிருக்கிறார்.

பரபரப்பான ஆக்‌ஷன் படத்தினை கொடுக்கவேண்டும், என்ற முனைப்போடு இருந்த, கௌதம் வாசுதேவ் மேனன், லாஜிக்கை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். சென்னையின் பல்வேறு இடங்களில் நடக்கும், கன் ஷூட் அவுட் காட்சிகள், நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது. குறிப்பாக, ஸ்டார் ஹோட்டலில் நடக்கும் காட்சியை சொல்லலாம். இந்த மாதிரியான பல காட்சிகள், படத்தின் மிகப்பெரிய பலவீனம். ஏதோ.. சென்னை சிட்டி போலீஸ் மொத்த பேரும், வெக்கேஷன் போன மாதிரி இருக்கு, காட்சியமைப்புக்கள். போற போக்குல ஒரு டைலாக் இருக்கு. ஆனால், அதை நம்ப முடியவில்லை! இதை தவிர்த்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும்.

சண்டைகாட்சிகள் நிறைந்த, ‘ஜோஷ்வா’ : இமைபோல் காக்க திரைப்படம், ஆக்‌ஷன் பிரியர்களுக்கானது, அவர்களை ஏமாற்றாது!