‘சத்தம் இன்றி முத்தம் தா’ – விமர்சனம்!

‘செலிபிரைட் புரொடக்ஷன்ஸ்’. நிறுவனம் தயாரிப்பினில் வெளிவந்துள்ள படம், ‘சத்தம் இன்றி முத்தம் தா’. பல குறும்படங்களை இயக்கியதன் மூலம், சர்வதேச விருதுகளை பெற்ற இயக்குநர், ராஜ் தேவ் இயக்கியிருக்கிறார். இப்படத்தினில், ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ் பேராடி, வியான், நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜுபின் இசையில், யுவராஜ் ஒளிப்பதிவில் இப்படம் உருவாகியுள்ளது.

‘சத்தம் இன்றி முத்தம் தா’ எப்படி இருக்கிறது, பார்க்கலாம்.

ஒரு பெரிய வீட்டினுள் பிரியங்கா திம்மேஷை கொலை செய்ய, ஒரு மர்ம உருவம் முயற்சி செய்கிறது. அதிலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு அவர் வெளியே ஓடி வருகிறார். ரோட்டில் உதவி கேட்டபடியே அலறும் அவரை, ஒரு மர்ம கார் இடித்து தள்ளிவிடுகிறது.  நடு ரோட்டில், உயிருக்கு போராடும் அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார், ஶ்ரீகாந்த்.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு சில நாட்களில் கண்விழிக்கும் பிரியங்கா திமேஷ், பழைய நினைவுகளை இழந்து விடுகிறார். அவரிடம்,  ஶ்ரீகாந்த் தன்னை கணவராக அறிமுகப்படுத்திக்கொள்வதுடன், அக்கறையுடனும் கவனித்து வருகிறார். இந்நிலையில், ஶ்ரீகாந்த் ஒரு சிலரை கொடூரமாக கொல்கிறார். அதை பார்த்து மிரளும் பிரியங்கா குழப்பமடைகிறார். அதோடு, அவருடைய தோழி, பிரியங்காவின் கல்யாண போட்டோவை அனுப்பி வைக்க, அதை பார்த்தவுடன் மேலும் குழப்பமும் பீதியும் அடைகிறார். அது என்ன? ஶ்ரீகாந்த் யார்? பிரியங்காவை கொலை செய்ய முயற்சித்தது யார்? போன்ற மர்மமான கேள்விகளுக்கு விடை சொல்வதே, ‘சத்தம் இன்றி முத்தம் தா’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், ஶ்ரீகாந்த். அதோடு, தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார். பாசம், ஆக்ரோஷம் என அனைத்து உணர்வினையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஃப்ளாஷ் பேக் காட்சிகளில், பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில், அதிரடி காட்டியிருக்கிறார்.

பிரியங்கா திமேஷ், காதல், எமோஷன், செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும், நன்றாக நடித்திருக்கிறார்.

வில்லனாக, ரகு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் வியான், இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் பேராடி, நிஹாரிகா உள்ளிட்டவர்கள் சிறப்பாகவே நடித்துள்ளனர்.

படத்தில், பல இடங்களில் ட்விஸ்ட் காட்சிகள் இருக்கிறது. இது த்ரில்லர் படங்களை விரும்பிப்பார்ப்பவர்களுக்கு பிடிக்கும். இயக்குநர் ராஜ் தேவ், மோசமில்லை எனும் சொல்லும் அளவிற்கு சிறப்பாகவே இயக்கியிருக்கிறார்.

திரைக்கதையில், தொய்வுகளும், கண்டுகொள்ளப்படாத லாஜிக்குகளையும், மறந்துவிட்டுப் பார்த்தால், படம் பரவாயில்லை!

‘சத்தமின்றி முத்தம் தா’ – த்ரில்லர் பிரியர்களுக்கானது.