‘காதல் என்பது பொதுவுடமை’ – விமர்சனம்!

Kaadhal Enbadhu Podhu Udamai  – Movie Review

Mankind Cinemas, Symmetry Cinemas , Nith’s Productions  ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருக்கும் ‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படத்தினை, Creative Entertainers and Distributors நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

‘காதல் என்பது பொதுவுடமை’  திரைப்படத்தில், லிஜோமோல் ஜோஸ், வினித், ரோகிணி,  கலேஷ், தீபா , அனுஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். ஒளிப்பதிவு – ஸ்ரீசரவணன், இசை -கண்ணன் நாராயணன், எடிட்டிங் – டேனி சார்லஸ், கலை – ஆறுசாமி, பாடல் – உமாதேவி.

‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படம், தன்பாலின ஈர்ப்பு (Lesbian, Gay) பற்றி பேசுகிறது. அதாவது, எதிர் எதிர் பாலினத்தவர்களுக்கு மட்டும் காதல் வருவதில்லை.  தன்பாலினத்தவர்கள் இடையிலும், காதல் அது சார்ந்த உணர்வுகள் உண்டு என்பதை பேசுகிறது. இது மாதிரியான படங்கள் ஆபாசத்தை முன்னிறுத்தியே எடுக்கப்படும். இந்தப்படமும் அப்படியே இருக்கிறதா? மாறுபட்டு இருக்கிறதா? பார்க்கலாம்.

லிஜோமோல் ஜோஸ் ன் அம்மா ரோகிணி. முற்போக்கு சிந்தனை கொண்ட, புகழ் பெற்ற யூடியுபர். ஒரு நாள் தன்னுடைய காதல் குறித்து, அம்மா ரோகிணியிடம் லிஜோமோல் ஜோஸ் தயக்கத்துடன் கூறுகிறார். ஆனால், ரோகிணி மகளின் காதலுக்கு  சம்மதம் தெரிவிக்கிறார். அதோடு காதலனை வீட்டுக்கு அழைத்து வருமாறு சொல்கிறார். அவரும் ரோகிணியின் முன்னர் அனுஷா பிரபுவை (பெண்ணை) நிறுத்தி காதலிப்பது இவளைத்தான் என சொல்ல, கடும் அதிர்ச்சுக்குள்ளாகிறார், ரோகிணி. லிஜோமோல் ஜோஸ் – அனுஷா பிரபு காதல் என்ன ஆனது. இவர்கள் மீதான சமூகத்தின் பார்வை என்ன? முற்போக்கு சிந்தனை கொண்ட ரோகிணி என்ன செய்தார்? என்பதை, ஆபாசம், அருவருப்பு இல்லாத திரைக்கதையின் மூலம், உணர்வுப்பூர்வமான விவாதங்களுடனும், விளக்கங்களுடனும் கூறியிருக்கிறார், இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

லிஜோமோல் ஜோஸ், சவாலான கதாபாத்திரத்தைத் தாங்கி, கதையின் நாயகியாக  நடித்து, ‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படத்தின் பெரும் பலமாக நிற்கிறார். தனது காதல் இயல்பானது என்பது குறித்து, தனது பெற்றோர்களான வினீத்திடமும், ரோகிணியுடனும் கூறும் காட்சிகளில் இயக்குநரின் நேர்மை, சிறப்பு. அதோடு அனுஷா பிரபுவை அரவணைக்கும் காட்சிகளும் சிறப்பு.

அனுஷா, தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்து, அந்த கதாபாத்திரத்தினை உயர்த்திப்பிடித்திருக்கிறார். அதோடு ரசிகர்களையும் எளிதில் ஈர்த்து விடுகிறார்.

முற்போக்கு சிந்தனை கொண்ட, மகளின் காதல் குறித்து அதிர்ச்சியும், தடுமாற்றமும் அடையும் கதாபாத்திரத்தில், ரோகிணி தனது பண்பட்ட நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தினை அழகாக்கியிருக்கிறார்.

லிஜோமோல் ஜோஸ் அப்பாவாக நடித்திருக்கும் வினித், வழக்கமான பெற்றோர்களின் மனநிலையை பிரதிபலித்திருக்கிறார்.

லிஜோமோல் ஜோஸை காதலிக்கும் கலேஷ், காதலி குறித்து தெரிந்த பிறகு நெருங்கிய தோழனாக மாறிவிடும் கதாபாத்திரத்தில் நடித்து சிறப்பு சேர்த்திருக்கிறார்.

அதீத நடிப்பினால் எரிச்சல் படுத்தும் தீபா, சிறப்பாக நடித்திருக்கிறார். தன்பாலினச் சேர்க்கை மீதான மக்களின் பார்வையினை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். திரைக்கதை நகர்வுக்கு பெரிதும் பயண்பட்டிருக்கிறார்.

கண்ணன் நாராயணின் இசை, ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு இரண்டும் படத்தின் பலமாக இருக்கிறது.

உமாதேவியின் பாடல் வரிகள் கதைக்களத்தோடு இயைந்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், தன் பாலினச் சேர்க்கை என்பது காமத்தினால் தூண்டப்பட்ட உணர்வு அல்ல. என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

தன்பாலின உணர்வினை, ஒரு நல்ல ஆரோக்கியமான விவாதமாக திரைக்கதையின் மூலம் வடிவமைத்திருப்பதோடு, அதை ரசிக்கும்படியும் கொடுத்திருக்கிறார், இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

மொத்தத்தில், ‘காதல் என்பது பொதுவுடமை’ – அழகான காதல் கதை!