Kaappaan Movie Review
‘அயன்’, ‘மாற்றான்’ படங்களுக்குப் பிறகு சூர்யாவும் கே.வி. ஆனந்தும் இணைந்திருக்கும் படம் ‘காப்பான்’.
கே.வி. ஆனந்தின் கதைக்கு பட்டுக்கோட்டை பிரபாகர், கபிலன் வைரமுத்து இருவரும் திரைக்கதை அமைத்துள்ளனர் எப்படி இருக்கிறது இவர்களது கூட்டணியில் உருவான ‘காப்பான்’
இயற்கை வளம் கொழிக்கும் டெல்ட்டா பகுதிகளில் ‘தோரியம்’ ( அணு உலைகளில் அணுக்கரு எரிபொருளாக ‘தோரியம்’ பயன்படுத்துகிறது ) எனும் தனிமம் உள்ளிட்ட பல கனிம வளங்கள் கொட்டிக் கிடக்கிறது. அதை அபகரிக்க இந்தியாவின் மிகப்பெரும் கோடீஸ்வர தொழிலதிபர் ஒரு பூச்சியினத்தை உருவாக்கி விளை நிலங்களை நாசப்படுத்த திட்டமிடுகிறார். இந்த படுபாதக செயலைக்கண்டிக்கும் பிரதமர் மோகன்லாலை வெடிகுண்டு வைத்து கொல்கிறார்.
மோகன்லாலின் மறைவுக்கு பிறகு ஆர்யா பதவிக்கு வர.. அவரையும் கொலை செய்ய திட்டமிடப்படுகிறது. பிரதமரின் தனி தலைமை பாதுகாவலர் சூர்யா அதை முறியடித்தாரா..? என்பது தான் ‘காப்பான்’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.
ஹெலிகாப்டரிலிருந்து குதிக்கும் சூர்யா சரக்கு ரயிலை வெடிவைத்து தகற்கும் முதல் காட்சியிலிருந்து படம் முடியும்வரை பல காட்சிகள் பரபரப்பாக படமாக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் நடக்கும் வெடிகுண்டு வெடிப்பு பரபரப்பின் உச்சம்.
கே.வி. ஆனந்தின் வழக்கமான சமூக அக்கறை மற்றும் அரசியல்வாதிகளின் அலுச்சாட்டியங்களை அழகாக காட்டியிருக்கிறார். இயற்கை விவசாயத்தின் அவசியம் பேசும் அவர் விளை நிலங்களை அபகரிக்க நடக்கும் சதிகளை சொல்லும்போது பகீரென இருக்கிறது. தஞ்சை மாவட்ட பகுதி பாதுகாக்கப்பட்டு அங்கு விவசாயம் தவிர வேறு எதுவும் நடக்கக்கூடாது என உத்தரவிடும் பிரதமர் ஆர்யாவின் பேச்சு நிஜமாக வேண்டும் என ஏக்கம் வருகிறது.
இயற்கை விவசாயியாகவும், எஸ்.பி.ஜி கமென்டோவாகவும் கலகலக்க வைக்கிறார். அவரது மிடுக்கான பார்வையும், செயலும் ஒரு நேர்மையான கமென்டோவை நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது. ரசிகர்களை கவர்கிறார்.
கே.வி.ஆனந்தின் வழக்கமான ரொமென்ஸ் காட்சிகள் மிஸ்…ஸிங்!. சாயிஷா, சூர்யா இடையில் காதல் காட்சிகள் இன்னும் இருந்திருக்கலாம். சாயீஷாவை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். மோகன்லால் கம்பீரம்! பிரதமராக நடிப்பில் அசத்தியிருக்கிறார். காதலி, அம்மா இருவருக்குமிடையே அன்பைச்சொல்லி தாய் நாட்டின் பெருமை பேசுமிடத்தில் அவர் கைதட்டல்கள் பெறுகிறார்.
விளையாட்டுப் பிள்ளையாக நடித்திருக்கும் ஆர்யா அசத்தல்!
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அழகான புது லொகேஷன்களில் பாடல் காட்சிகளை கொடுக்கும் கே.வி.ஆனந்த் இந்தப்படத்தில் படம் முடிந்தவுடன் ஸ்க்ரோல் டைட்டில் கார்டில் போட்டு ஏமாற்றியிருக்கிறார்.
படத்தில் ஆக மோசம் ஹாரிஸ் ஜெயராஜ்! பாடல்களும் சரியில்லை…பின்னணி இசையும் சரியில்லை.. ‘ரோஜா’ படத்தில் வரும் பிஜிஎம் சில இடங்களில் வருகிறது
படத்தின் நீளம் சற்று சோர்வை தருகிறது அதை தவிர்த்திருக்கலாம். எடிட்டர் ஆண்டனி ஒகே!
பரபரப்பான ஆக்ஷன் படத்தில் ஒரு அருமையான சோஷியல் மெஸேஜை சொல்லியிருக்கும் கே.வி.ஆனந்த், சூர்யா கூட்டணி வெற்றிக் கூட்டணி.