கப்ஜா – விமர்சனம்!

ஒளிப்பதிவாளர் ஏ.ஜே.ஷெட்டியின் உழைப்பு பாராட்டுக்குரியது!

Sri Siddeshwara Enterprises & Invenio Origin நிறுவனங்கள் இணைந்து வழங்க, இயக்குனர் R.சந்துரு தயாரித்து, இயக்கியிருக்கும் படம், கப்ஜா. இதில் கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான உபேந்திரா, ஷிவ ராஜ்குமார், கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் ஆகியோருடன் முரளி ஷர்மா, நவாப் ஷா, சுனில் புரனிக், ஜான் கொக்கேன், கோட்டா சீனிவாச ராவ், சுதா, கபிர் துஹான் சிங், தேவ் கில் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

முதலில் ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனம் வெளியிடுவதாக இருந்த ‘கப்ஜா’ திரைப்படத்தை, தமிழகமெங்கும் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ வெளியிட்டுள்ளது. கப்ஜா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான போது ‘கே.ஜி.எஃப்’ சாயலில் இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமானது. ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை கப்ஜா பூர்த்தி செய்ததா? பார்க்கலாம்.

சுதாவின் கணவர் இந்திய சுதந்திர போராட்டத் தியாகி. அவர் கொல்லப்பட்ட பிறகு சுதா தனது மகன்களான சுனில் புரனிக், உபேந்திரா இருவரையும் கூட்டிக்கொண்டு அமராபுரம் வருகிறார். சுனில் புரனிக் தனது தம்பி உபேந்திராவை படிக்க வைத்து, இந்திய பைலட்டாக உருவாக்குகிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, உபேந்திராவின் காதலி ஸ்ரேயா சரணின் அப்பா முரளி ஷர்மா கோஷ்டிக்கும், இன்னொரு கோஷ்டிக்கும் அரசு அதிகாரத்தை கைபற்ற மோதல் நடக்கிறது.  அப்போது எதிர்பாரத விதமாக உபேந்திராவின் அண்ணன் சுனில் புரனிக் கொல்லப்படுகிறார். அதற்கு பழி தீர்க்கும் உபேந்திரா இந்திய அரசே மிரளும் மிகப்பெரிய டானாக உருவாகிறார்.

அதன் பிறகு, முரளி ஷர்மாவின் எதிர்ப்பை மீறி உபேந்திரா ஸ்ரேயா சரணை திருமணம் செய்து கொள்கிறார். இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் கப்ஜா படத்தின் மொத்த கதையும்.

கப்ஜா, முழுக்க முழுக்க ‘கே.ஜி.எஃப்’ ன் சாயலில் உருவாகியிருக்கிறது. படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் வரை சுவாரஸ்யமின்றி செல்கிறது. பகதூர் கோஷ்டிக்கும் பாண்டே கோஷ்டிக்கும் இடையே நடக்கும் மோதலில் யார், யாரை கொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒரு காட்சி கூட பிரமிப்பையோ, படம் பார்க்கும் ஆர்வத்தையோ தூண்டவில்லை! நிலக்கரி சுரங்கத்திற்குள் ‘செட்’ அமைக்கப்பட்டது போல் எங்கு பார்த்தாலும் கருப்பு நிறத்தில் தூசி மண்டிக்கிடக்கிறது. எதற்காக அந்த செட்? இதனால் திரைக்கதையில் ஏதாவது ஈர்ப்பு இருக்கிறதா? என்றால், இல்லை என்பதே படம் பார்த்த அனைவரின் பதிலாக இருக்கிறது.

எமோஷன், காதல், சண்டை என எந்தக்காட்சிகளிலும் ஜீவனே இல்லை! மாறாக அந்தக்காட்சிகள் ரசிகர்களின் ஜீவனை எடுக்கிறது! உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு அலுத்தமில்லாத நடிப்பினை நடிகர்களும், நடிகைகளும் கொடுத்துள்ளனர்.

வசனங்கள் சுத்தமாக எடுபடவில்லை!

‘கே.ஜி.எஃப்’ படத்திற்கு இசையமைத்துள்ள ரவி பஸ்ரூர் தான் கப்ஜா படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். இவரது பின்னணி இசை இம்சை செய்கிறது.

ஆனால் மதுரகவியின் ‘நமாமி நமாமி’ பாடல் வரிகளில் வைஷ்ணவி கண்ணனின் குரலும், ஸ்ரேயா சரணின் நடனமும் அந்த பாடல் காட்சியை இன்னொரு முறை பார்க்கத்தூண்டுகிறது!  ‘பல் பல் பல்லங்குழி’ பாடல் கூட நன்றாகவே இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஏ ஜே ஷெட்டியின் கடும் உழைப்பு, மிகுந்த பாராட்டுக்குரியது! சபாஷ்!

ரசிகர்களுடைய அயர்ச்சியின் உச்சத்தில் ஒரு வழியாக க்ளைமாக்ஸ் வருகிறது.

தொடரும்….  கப்ஜா 2