கேரளத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் நடக்கும் ஒரு கொலையின் பின்னணியே படத்தின் கதை. பல படங்களில் நாம் பார்த்த சாதாரண பழிவாங்கும் கதை தான். ஆனால் வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறார், இயக்குநர் நிஷாந்த் களிதிண்டி.
மூன்று சகோதரர்கள், அவர்களது அப்பாவின் கொலைக்கு பழிதீர்க்க ஒன்று சேருகின்றனர். ஆனால் அதில் ஒருவருக்கு விருப்பமில்லை. இருந்தாலும் மற்ற இருவரால் அவர் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்படுகிறார்.
கொலை செய்துவிட்டு திரும்பும் வழியில் நடக்கும் ஒரு சம்பவம் அவர்களுக்கு திகில் ஏற்படுத்துவதுடன், படம் பார்ப்பவர்களுக்கும் திகிலூட்டுகிறது. இது அவர்கள் செய்த பாவமா? விதியா? எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர். அதிலும் மூன்று சகோதரர்களாக நடித்திருக்கும் வசந்த் செல்வம், தினேஷ் மணி, விஜய் ராம் ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். இதில் தினேஷ் மணிக்கு நடிக்க ஒரு சில காட்சிகள் மட்டுமே. ஆனால் மற்ற இருவருக்கும் பல காட்சிகள் கிடைத்திருக்கிறது.
மூத்த சகோதரராக வரும் தினேஷ் மணி முரட்டு விழிகளில் மிரட்டுகிறார்.
கடைக்குட்டியாக வரும் விஜய் ராம், அப்பாவி சிறுவனாக நடித்து மனதை கொள்ளை கொள்கிறார். அதிலும் ‘சைக்கோ’ வில்லன் ஒரு புறமும், போலீஸ் ஒரு புறமும் துரத்த மூச்சு வாங்கிய நிலையில், வயதான மூதாட்டி ஒருவரிடம் ‘லெமன் சோடா’ கேட்கும் காட்சியில் குபீர் சிரிப்பினை வரவழைக்கிறார். மொத்த தியேட்டரும் சிரிக்கிறது.
‘சைக்கோ கில்லராக’ நடித்திருக்கும் ஹக்கிம் ஷாஜாகான், செம்ம டெர்ரர்! பார்ப்பதற்கு பழமாக இருந்தாலும் நடிப்பினில் பயமுறுத்துகிறார்.
ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப் மற்றும் அஷீம் மொஹமத் ஆகியோரின் ஒளிப்பதிவு நேர்த்தி.
வினோத் தணிகாசலம், ஜுடா பவுல், நீல் செபஸ்டியன் ஆகியோரது கூட்டணியில் இசை காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது.
ஓரே லொக்கேஷன், ஓரிரு நடிகர்களை வைத்துக்கொண்டு குறிப்பிட்டு, பாராட்டும் படியான படத்தினை கொடுத்துள்ளார் இயக்குனர் நிஷாந்த் களிதிண்டி.
சில காட்சிகளும், வசனங்களும் அருவறுப்பாக இருக்கிறது.
ஹாலிவுட் ‘சைக்கோ’ படங்களை பார்ப்பவர்களுக்கு ‘கடைசீல பிரியாணி’ பிடிக்கலாம்!