‘ஜாங்கோ’ : விமர்சனம்.

தமிழ்சினிமாவில் அவ்வப்போது அறிவியல் புனைவு சார்ந்த (சயின்ஸ் ஃபிக்ஷன்) திரைப்படங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. அந்த வரிசையில் ‘டைம் லூப்’ பாணியில் உருவாகியுள்ள படம் தான் ‘ஜாங்கோ’. இந்தப்படம், இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாகியுள்ளது குறிப்பிடதக்கது.

சதீஷ்குமார், மிர்னாளினி, கருணாகரன், ஹரீஷ்பெராடி, வேலு பிரபாகரன் ஆகியோர் நடித்துளனர். மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வரும் ‘Thirukumaran Entertainment’ மற்றும் ‘Zen Studios’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

ஒருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ ஒரு குறிப்பிட்ட கால ‘நேரச் சக்கரத்திற்குள்’ சிக்கிக்கொள்வது தான், ‘டைம் லூப்’. சிம்பிளா சொல்லனும்னா ஒரே தருணத்தில் சிக்கி மீண்டும் மீண்டும் வாழ்வது.  ‘ஜாங்கோ’ என்பது இந்த ‘டைம் லூப்’பினை உடைக்கும் கருவி. வித்தியாசமாக தெரிகிறதல்லவா! எப்படியிருக்கிறது? பார்க்கலாம்.

கணவன் மனைவியான சதீஷ்குமார், மிர்னாளினி இருவரும் ஒரு பிரச்சனையின் காரணமாக பிரிகிறார்கள். இந்நிலையில் ஒரு நாள் நடக்கும் சில சம்பவங்கள், பல நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதனால் கடுமையான மனக்குழப்பத்திற்கு ஆளாகிறார். சிலர் மிர்னாளினியை கொலை செய்யவும் திட்டமிடுகின்றனர். டைம் லூப்பிலிருந்து எப்படி விடுபட்டாரா? மிருனாளினியை காப்பாற்றினாரா? என்பது தான், ‘ஜாங்கோ’ படத்தின் கதை.

இயக்குநர் சுவாரஸ்யமான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். புதிய கதைக்களம் என்பதால் கூடுதல் ஆர்வத்தோடு படத்தினை கவனிப்பவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு பரபரப்பான சம்பவத்தை கொண்டு திரைக்கதை அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கதாநாயகன் சதீஷ் குமாரைச் சுற்றியே முழுத்திரைப்படமும் செல்கிறது. ஆனால் அவரால் காதல், குழப்பம், கோபம், அதிர்ச்சி என எந்த உணர்வையும் காட்டமுடியவில்லை. இதனால் ரசிகர்களின் கவனம் திரையை விட்டு அகன்று அவர்களது செல்போனுக்குள்ளே செல்கிறது. அவரைப்போலவே நாயகியாக நடித்திருக்கும் மிர்ணாளி.

இன்ஸ்பெக்டராக வரும் கருணாகரன், கச்சிதமாக நடித்திருக்கிறார். விஞ்ஞானிகளாக வரும் இயக்குநர் வேலு பிரபாகரன், ஹரிஷ் பெராடி சரியான தேர்வு.

இயக்குநர் மனோ. கார்த்திகேயன், ‘டைம் லூப்’ என்ற விஷயத்தை எளிதில் புரிந்துக்கொள்ளும்படி காட்சிகளை வடிவமைத்திருப்பது மட்டுமே, சிறப்பு. லோகேஷின் படத்தொகுப்பினை பாராட்டவேண்டும். ஒரே காட்சியினை பல்வேறுவிதமான கோணங்களில் சிறப்பாக படம் பிடித்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை. படத்தின் வேகத்தை ஜிப்ரான் தனது பின்னணி இசையால் முடிந்தவரை நகர்த்தியுள்ளார்.

‘ஜாங்கோ’ரசிகர்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை!