கணம் – விமர்சனம்!

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்ஆர்.பிரபு தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் படம், கணம். இதில் ஷர்வானந்த், அமலா, நாசர், ரமேஷ் திலக், சதீஷ், ரவி ராகவேந்திரா, ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார், அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக்.

அம்மா சென்டிமென்ட், டைம் ட்ராவல் இந்த இரண்டும் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ஆனால் இந்த இரண்டும் இணைந்து ‘கணம்’ என்ற பெயரில் வந்து இருப்பது புதிது. எப்படி இருக்கிறது. பார்க்கலாம்.

பள்ளிக் காலத்து நண்பர்களான ஷர்வானந்த், ரமேஷ் திலக், சதீஷ்  ஆகிய மூவரும் இணை பிரியா நண்பர்கள். இவர்களுக்கு நிறைவேறாத பல ஏக்கங்கள், ஆசைகள். அதை நிறைவேற்ற யாருக்கும் எளிதில் கிடைத்திராத டைம் மிஷினில் பயணிக்கும் வாய்ப்பினை ஒரு நிபந்தனையுடன் ஏற்படுத்தி தருகிறார், நாசர். அவரவர் ஏக்கங்களையும், ஆசைகளையும் தீர்த்து கொள்ள அந்த காலகட்டத்துக்குள் பயணிக்கின்றனர். அவர்கள் நினைத்தது நடந்ததா? நாசரின் நிபந்தனை என்ன? என்பது தான், ‘கணம்’ படத்தின் சுவாரஷ்யமான, விறுவிறுப்பான அம்மா சென்டிமென்ட் கதை.

பெற்ற தாயின் இழப்பை எண்ணி எண்ணி ஏங்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப்படம்  நெகிழச்செய்யும். அமலா இதற்கு முன் சில படங்களில் ( Life Is Beautiful ) நடித்து இருந்தாலும், கணம் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும். அம்மாக்களின் அன்பை அழகாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நிறைகிறார். அவருக்கு மகனாக நடித்திருக்கும் ஷர்வானந்த் மகனாகவே நடித்து கண்களை கலங்கச்செய்கிறார். இவர்கள் இருவரும் நடிக்கும் காட்சிகள் உயிரோட்டத்துடன் இருக்கிறது. பாசத்திற்காக ஏங்கும் போதும், பிரிய நேரும் போதும் உணர்வுகளை ஷர்வானந்த் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு அப்பாவாக நடித்து இருக்கும் ரவிராகவேந்தரும் குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்து இருக்கிறார்..

சதீஷ், ரமேஷ் திலக்  இருவரும் கதையின்  அடுத்தடுத்த நகர்வுகளுக்கும், ரசிகர்களை சிரிக்க வைப்பதற்கும் பயண்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

நாயகி ரீத்து வர்மா கதாநாயகி, அவ்வளவு தான்.. கொடுக்கபட்ட வேலையை செய்து இருக்கிறார்.

தெளிவான சுஷித் சாரங்கின் ஒளிப்பதிவும், ஶ்ரீஜித் சாரங்கின் குழப்பமில்லாத எடிட்டிங்கும் காட்சிகளுக்கு பலம் சேர்த்து இருக்கிறது. ஜேக்ஸ் பிஜோயின்  பின்னணி இசை காட்சிகளை மேலும் மெருகுபடுத்தி இருக்கிறது.

அம்மா சென்டிமென்டில், இதற்கு முன்னர் பல படங்கள் வந்து இருந்தாலும், இந்தப்படம் சற்று வித்தியாசமான, திரைக்கதையின் மூலம் கவனம் ஈர்க்கிறது.

சில குறைகள் இருந்தாலும், குடும்பத்தினருடன் அனைவரும் பார்க்ககூடிய, வகையில் இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஶ்ரீகார்த்திக்.