துளுவ நாட்டின் மன்னர் ஒருவர் நிம்மதி இல்லாமல் தவித்து வருகிறார். இறை வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட அவர் சாமியாடி ஒருவரிடம் இது குறித்து முறையிடுகிறார். அதற்கு அந்த சாமியாடி உன் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன். அதற்கு ஈடாக நான் கத்தும், ‘சத்தம்’ எதிரொலிக்கும் திசை வரை என் மக்களுக்கு (தலித்) நிலத்தினை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு நிம்மதி கிடைக்கிறது.
காலப்போக்கில் அந்த மன்னரின் வாரிசு ஒருவர் தலித் மக்களுக்கு கொடுத்த நிலத்தை திரும்ப கேட்டு கோர்ட்டுக்கு போகிறார். இதனால் அந்த தெய்வத்தின் கோபத்திற்கு ஆளான அவர் கோர்ட்டு வாசலிலேயே ரத்தம் கக்கி சாகிறார். இவருக்கு அடுத்து வரும் வாரிசு ஒருவர் தலித் மக்களுக்கு கொடுத்த நிலத்தினை சாமார்த்தியமாக அவர்களிடமிருந்து பறிக்க முயற்சி செய்கிறார். இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது தான் ‘காந்தாரா’ படத்தின் கதை.
கர்நாடகாவின் தெற்கு மற்றும் உடுப்பி மாவட்டங்களில் இன்று வரை பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் பழமையான சடங்குகளில் இந்த பூத வழிபாடும் ஒன்று. காட்டு விலங்குகளான புலி மற்றும் பன்றியினை தெய்வங்களாக பாவித்து, வேடமிட்டு தலித் சமூகத்தினரால் இது நடத்தப்படுகிறது. இந்த சடங்கின் போது பூத வேடமிட்டு ஆக்ரோஷமாக ஆடும் சாமியாடி, பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை சொல்லி, அருள்வாக்கு தருகின்றனர். அது சத்தியமான வாக்காக உயர் சாதியினரால் பார்க்கப்படுகிறது. இதை அப்படியே முடிந்த அளவு கதை ,எழுதி இயக்கியிருப்பதோடு கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார், ரிஷப் ஷெட்டி.
இது மூட நம்பிக்கையாக பார்க்கப்பட்டாலும் , மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை நம்புவர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும்.
பாரம்பரியமாக தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரால் வழிவழியாக சாமியாடும் வழக்கத்தினை பின்பற்றுபவர்களால் மட்டுமே சாமியாடி அருள்வாக்கு சொல்லப்படும், நிலையில் சாமியாடும் குடும்பத்தில் பிறந்த நாயகன் ரிஷப் ஷெட்டி எப்போதும் குடித்துவிட்டு , நண்பர்களுடன் பன்றியினை வேட்டையாடுவது முரணாக இருக்கிறது.
படம் முதல் பாதியில் சுவாரஷ்யமின்றி சென்றாலும் இரண்டாம் பாதியில் சுவாரஷ்யமாக இருக்கிறது. அதிலும் கடைசி 20 நிமிடங்கள் புல்லரிக்கச் செய்யும் காட்சியமைப்பு நம்பாதவர்களையும் நம்ப வைத்து விடும். ரிஷப் ஷெட்டியின் ஆக்ரோஷமான சாமியாட்டம் ஆடாதவர்களையும் ஆடவைத்துவிடுகிறது. நம்பாதவர்களையும் நம்ப வைத்து விடுகிறது.
நடிகர், இயக்குனர் ரிஷப் ஷெட்டி மிரட்டி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சப்தமி கவுடா, வனத்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் கிஷோர், நிலச்சுவான்தாரரின் வாரிசாக நடித்திருக்கும் அச்சுயுத் குமார் உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பினை கொடுத்து இருக்கிறார்கள்.
க்ளைமாக்ஸ் காட்சியினையும், கம்பளா விளையாட்டினையும் (எருமை விளையாட்டு) அழகாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ்.காஷ்யப்.
பி.அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பதோடு, காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் பின்னணி இசை மிரட்டுகிறது.
‘காந்தாரா’வன காவல் தெய்வத்தின் ஆக்ரோஷ ஆட்டம்!