‘கட்டானா’ கிராபிக்ஸ் அசத்தலுடன் கூடிய ஒரு காலப்பயணம்!

கணினித் தொழில்நுட்பம்’ ஹாலிவுட் படங்களில் இடம்பெற்று அசத்துவதைக் கண்டுதான் நாம் இதுவரை மிரண்டு வந்துள்ளோம். இக்காலத்தில் நம்மவர்களும் அந்த முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.’ .கிராபிக்ஸ் தொழில்நுட்ப அசத்தலோடு கட்டானா என்றொரு தமிழ்ப் படம் உருவாகி வருகிறது.

காட்சியில் புதுமை மட்டுமல்ல கதையிலும் புதுமையாக, ஒரு காலப்பயணம் செய்யும் கதையாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சதீஷ் ராமகிருஷ்ணா இயக்குகிறார். இவர் ஏற்கெனவே தமிழனானேன், 23 23 தி பிகினிங் என்று இரண்டு படங்களை இயக்கி உள்ளார். இது இவருக்கு மூன்றாவது படம். டாக்டர் ராஜேந்திரன் திரைத்துறையில் பல வருடங்களாக அனுப்பவும் பெற்றவர் அவருடன் இணைந்து

JPS சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜெயபால் சாமிநாதன் தயாரிக்கிறார். இவர் விநியோகத் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் படைத்தவர். திரையுலகில் தயாரிப்புத் துறையிலும் நீண்ட காலத் தொடர்பில் உள்ளவர் . இவருடன் தயாரிப்பில் இயக்குநரின் வெற்றி தமிழ் உருவாக்கம் நிறுவனமும் இணைந்துள்ளது.

படம் எதைப் பற்றி பேசுகிறது? என்று இயக்குநர் சதீஷ் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது,

“இது ஒரு காலப்பயணம் செய்யும் கதை. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இளவரசன் டைம் ட்ராவல் எனப்படும் காலப்பயணம் மூலம் தற்காலத்துக்கு பயணிக்கிறான். இங்கே நிகழ்காலத்திற்கு வந்தவன் இங்கு நிலவும் பிரச்சினைகளைப் பார்க்கிறான். தன்னிடம் உள்ள பாரம்பரியமான தற்காப்பு வீரக்கலையைப் பயன்படுத்தி இந்த பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறான், சமாளிக்கிறான் முடிவு என்ன என்பதையே படமாக்கி இருக்கிறோம்.

வரலாற்றிலும் மதம் சார்ந்த கதைகளிலும் எந்தத் தகவலும் இடம் பெறாமல் கைவிடப்பட்டுள்ளான் ஓர் இளவரசன் .அவன் பெயர் இளஞ்சேட்சென்னி கரிகால் வர்மன். அவன் தான் இந்தப் படத்தின் கதையில் கதாநாயகனாக முதன்மைக் கதாபாத்திரமாக வருகிறான்.

இது ஒரு முழுக்க முழுக்க மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் தற்காப்புக்கலை சார்ந்த படம். படத்தில் ஒன்பது சண்டைக்காட்சிகள் உள்ளன. மார்ஷியல் ஆர்ட்ஸ் சயின்ஸ் பிக்சன் ஆக்சன் படம் என்று இதைக் கூறலாம். யாரும் அனுகாதவற்றை நாங்கள் அணுகி உள்ளோம்.படம் பார்ப்பவர்களுக்கும் சாகச அனுபவத்தைத் தரும்.

இதுவரை அந்நிய மொழிப் படங்களில் குறிப்பாக ஹாலிவுட் படங்களில்தான் கணினித் தொழில்நுட்பத்தைப் பார்த்து நாம் மிரட்சி அடைந்திருக்கிறோம். இந்தப் படத்தின் கதை காலப்பயணம் பற்றிக் கூறுவதால் அதில் கணினிக் தொழில்நுட்பத்தின் பங்கு மிகப் பெரிய அளவில் இருக்கிறது. அதைப் படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான காட்சிகள் மூலம் உணரலாம்” என்கிறார்.

இப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி படத்தொகுப்பு செய்து இயக்கியுள்ள இயக்குநர் சதீஷ் ராமகிருஷ்ணனே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கோவையைச் சேர்ந்த ஆல்சிஃபா கதாநாயகியாக நடித்துள்ளார்.

சரவணன் ராதா கிருஷ்ணன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. யாரும் தொடாத ஒரு விஷயத்தை பேசி உள்ளதாக இயக்குநர் நம்புகிறார் .இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி படத்தின் தரத்தை அடையாளப்படுத்தியது.  இந்தப் படம் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகிறது.