துவாரகா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘கதிர்’. படத்தினை எழுதி இயக்கி இருக்கிறார், தினேஷ் பழனிவேல். முக்கிய கதாபாத்திரங்களில் வெங்கடேஷ் அப்பாத்துரை, சந்தோஷ் பிரதாப், பாவ்யா ட்ரிக்கா, ரஜினி சாண்டி, ஆர்யா ரமேஷ் ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.
வழக்கம் போல் இன்ஜினியரிங் படிப்பு மேல் பழி போட்டுவிட்டு, குடித்து கும்மாளம் போடும் ஊதாரிகளின் தலைவன், கதையின் நாயகன் வெங்கடேஷ் அப்பாத்துரை. இந்த கும்பல் எதை பற்றியுமே கவலைப்படாமல் ஊரை சுற்றி வருகிறது. ஒரு நாள் தன்னுடைய அப்பா திட்டி விட, அதனால் வேலை தேடி சென்னையில் உள்ள நண்பனின் வீட்டிற்கு செல்கிறார். அங்கேயும் குடித்துவிட்டு ரகளை செய்கிறார். அந்த வீட்டின் உரிமையாளரான பாட்டி, ரஜினி சாண்டி அவருக்கு புத்திமதி சொல்கிறார்.
குடிகார நாயகன் வெங்கடேஷ் அப்பாத்துரை திருந்தினாரா? இன்ஜினியரிங் படிப்பு மேல் பழி போடாமல் தன் தகுதியை வளர்த்துக்கொண்டாரா? என்ன ஆனார். என்பதை இயக்குனர் தினேஷ் பழனிவேல், ஒரு புரட்சி படமாக கொடுக்க முயற்சி செய்து, வெற்றி பெறாவிட்டாலும் முயற்சி செய்ததற்காக அவரை வரவேற்கலாம்.
நாயகனாக நடித்துள்ள வெங்கடேஷ் அப்பாத்துரை குறைவில்லாமல் நடித்துள்ளார். ஆக்ஷன், ரொமேன்ஸ், சென்டிமென்ட் என அனைத்தையும் ஆர்வத்துடன் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பாவ்யா ட்ரிகா அழகு. சின்ன சின்ன முக பாவங்களினால் மனம் கவர்கிறார். இவர்கள் இருவரை விட, ஹவுஸ் ஓனராக நடித்திருக்கும் ரஜினி சாண்டி அதிகம் மனதை கவர்ந்து விடுகிறார். ஆனால் இவை அனைத்தும் படமாக்கப்பட்ட விதத்தினால் அது வீணாகி இருக்கிறது.
சில காட்சிகள் வந்தாலும் சந்தோஷ் பிரதாப் நினைவில் நிற்கிறார்.
கல்லூரி வாழ்க்கை, ரஜினி சாண்டியின் போராட்ட வாழ்க்கை, நண்பனை இழந்ததால் விவசாயம் இதில் எதையும் முன்னிலைப்படுத்தாமல் எல்லாவற்றையும் ஒரு சேர குழப்பியதால் எதற்கும் தனித்துவம் இல்லாமல் தனித்து நிற்கிறது திரைக்கதை!
மொத்தத்தில் ‘கதிர்’ ஆர்வமுள்ள இயக்குனரின் அமெச்சூர் அட்டெம்ப்ட்!