ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் ஹாஸ்டல். இந்தப்படம், ‘அடி கப்பியாரே கூட்டமணி’ என்ற மலையாளப்படத்தின், மறு உருவாக்கம். இப்படத்தில் முதலில் வைபவ் நடிப்பதாக இருந்தது. அவருக்கு பதில் அஷோக் செல்வன் நடித்து இருக்கிறார். இவருடன் சதீஷ், ப்ரியா பவானி ஷங்கர், நாசர், முனீஷ்காந்த் ஆகியோர் நடித்து இருக்கின்றனர். எப்படி இருக்கிறது பார்க்கலாம்.
ப்ரியா பவானி ஷங்கர் தனது காதலனை பார்ப்பதற்கு கெடுபிடியான ‘பாய்ஸ்’ ஹாஸ்டலுக்குள், அஷோக் செல்வனின் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைகிறார். ஆனால் அவர் வருவதற்குள் அவரது காதலன் எஸ்கேப்! ஆகிறார். ஹாஸ்டலுக்குள் உள்ளே ஒரு பெண் இருப்பதை தெரிந்து கொண்ட வார்டன் முனிஷ்காந்த், அவரை பிடிக்க முயற்சி செய்கிறார். என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை.
அடல்ட் காமெடியை நம்பிய இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன், திரைக்கதையில் சில மாறுதல்களை செய்து இருந்தால் ரசிக்கும்படியாக இருந்து இருக்கும். ரவிமரியாவின் நடிப்பினில் பெரும்பாலான காமெடிக்காட்சிகள் கடுப்பேற்றுகின்றன. ஆனால், சில காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.
அசோக் செல்வன் பெரிதாக கவரவில்லை. ‘முட்டாள் பாதிரியார்’ கதாபாத்திரத்தில் நாசர், சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். அவருக்கு வலதுகரமாக வரும் வார்டனாக முனிஷ்காந்த் வழக்கம் போல் நடித்திருக்கிறார்.
அஷோக் செல்வன், ப்ரியா பவானி ஷங்கர், சதீஷ் , KPY யோகி, முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, ஆகியோரை அடல்ட் காமெடி வசனங்களை பேச வைத்து படம் பார்ப்பவர்களை சலிப்படைய வைத்திருக்கிறார், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.
இந்த ஹாஸ்டலில் ‘கடி’ அதிகம் ”காமெடி’ குறைவு!