தமிழ் திரை உலகினர் கடும் உழைப்பாளிகள் என்றும், ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதையை தர வேண்டுமென்றும் ‘கே ஜி எஃப் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் தெரிவித்தார்.
ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்
இந்நிலையில்‘கே ஜி எஃப் 2’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் , தமிழகத்தில் படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, சண்டைப்பயிற்சி இயக்குநர் அறிவு, தமிழ் பதிப்பிற்கு வசனம் எழுதிய வசனகர்த்தா அசோக், ஒளிப்பதிவாளர் புவன் கௌடா, தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் கௌடா, நடிகை ஈஸ்வரி ராவ், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் சரண் இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் படத்தின் கதாநாயகனான ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசுகையில்,
” கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்திலேயே இணைந்து பணியாற்ற வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பல்வேறு சூழல் காரணமாக இணைந்து பணியாற்ற முடியவில்லை. கே ஜி எஃப் படத்தின் ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய கலைஞர்கள் தெளிவான திட்டமிடலுடன் நேர்த்தியாக பணியாற்றியதால் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படைப்பாக இது உருவாகி இருக்கிறது.
எங்களுடைய நிறுவனத்திலிருந்து தயாராகும் திரைப்படங்களை மட்டுமே விநியோகித்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு ஏனைய தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களையும் வினியோகிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.
திரைப்பட துறையில் பிரம்மாண்டத்திற்கு என எப்போது ஒரு தனி ஈர்ப்பு உண்டு. டைரக்டர் ஷங்கர் சார் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டம் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தினார். அதனால் திரைத்துறை ஆரோக்கியமாக வளர்ச்சி அடைந்தது. வணிக எல்லையும் விரிவடைந்தது. புதுபுது தொழில்நுட்பங்களும், புதிய சிந்தனைகளும் உருவானது. மற்றொருபுறம் ராஜமௌலி சார் பிரம்மாண்டத்தை தன் பாணியில் வழங்கி ஆச்சரியப்படுத்தினார். அதை தொடர்ந்து பிரசாந்த் நீல் சார் அனைவரையும் திக்குமுக்காடும் வகையில் புதிய வகையிலான பிரமாண்டமான கே ஜி எஃப்பை வழங்கினார். எப்படி அவரால் இப்படியும் ஒரு விசயத்தை சிந்திக்க முடிந்தது என்று வியந்து பார்க்கிறேன். ஒவ்வொரு மாநில திரைத்துறையும் ஒன்றிணைந்து இன்று இந்திய திரைப்படத் துறை என்ற புது வடிவம் பெற்றிருக்கிறது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு மொழியில் உருவான படத்தை இந்தியா முழுவதும் பார்வையாளர்களால் ரசிக்கப்படுவது சந்தோஷமாக இருக்கிறது. இதன்மூலம் சர்வதேச தரத்திலான படைப்புகளை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது சாதாரணமான விசயமல்ல. இதற்கான முயற்சியை தயாரிப்பாளர், இயக்குநர், நட்சத்திர நடிகர் என மூவரும் ஒன்றிணைந்து, பொறுமையுடன் காத்திருந்து ,தெளிவான திட்டமிடலுடன் உழைத்து பூர்த்தி செய்திருக்கிறார்கள். இந்த வகையில் உருவான கே ஜி எஃப் 2 ஏப்ரல் 14ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவதற்காக எங்களின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாகி இருப்பதால் கொண்டாட்டமான காலகட்டம். இரண்டு படங்களையும் பார்த்து கொண்டாடுங்கள். இயக்குநர் பிரசாந்த் நீல் அவர்கள் கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது படத்தை இயக்கிவருகிறீர்கள். விரைவில் தமிழிலும் திரைப்படத்தை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ராக்கிங் ஸ்டார் யஷ் அவர்களுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உருவாகி இருப்பதால், நீங்களும் தமிழில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.
இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில்,
” கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்திற்கு பேராதரவு வழங்கிய தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கேஜிஎப் 2 படத்திற்காக கடந்த 3 ஆண்டுகளாக அளித்துவரும் அன்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படைப்புகள் மூலம் இரு மாநில மக்களுக்கு இடையே பரந்த மனப்பான்மை ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன். கே ஜி எஃப் 2 படத்தை வெளியிடுவதில் ஒத்துழைப்பு வழங்கி வரும் தயாரிப்பாளர் பிரபு அவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அழகான நடிகர்களை வைத்துக்கொண்டு கே ஜி எஃப் போன்ற அற்புதமான கதையை சொல்லியதற்காக நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். கே ஜி எஃப் படத்தின் வெற்றிக்கு என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களின் முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பு வழங்கினர். அதனால்தான் இந்தப் படத்தை பிரம்மாண்ட படைப்பாக உருவாக்க முடிந்தது. கே ஜி எஃப் என்ற கனவு உலகத்தை காட்சிகளாக நடிகர் யஷ்ஷால் உணர முடிந்தது. அதனால் அதனை அவர் தன்னுடைய தோள்களில் ஒற்றை ஆளாக சுமந்து பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கியிருக்கிறார். இதற்காக அவருக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.” என்றார்.
‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் பேசுகையில்,
” மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னுடைய நண்பர் விஷால் மூலம் கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தை வெளியிட்டோம். அதற்கு ஆதரவு அளித்ததற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடும் உழைப்பாளிகள். சண்டைப்பயிற்சி இயக்குநர் அன்பறிவு இதற்கு சிறந்த உதாரணம். சண்டைக் காட்சிகளின் போது ஒவ்வொரு ஷாட்டிலும் மிகுந்த அக்கறையுடன் பாதுகாப்பு அம்சங்களை ஒன்றுக்கு பல முறை ஆய்வு செய்து பிறகு நடிகர்களை அக்காட்சியில் நடிக்க வைப்பார். அவரது இந்த அணுகுமுறை அவருடைய தொழில் மீது அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பை உணர்த்தியது. இதற்காக நான் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய கடின உழைப்பிற்கு, படத்தின் முதல் பாகத்தில் பணியாற்றியதற்காக அன்பறிவு மாஸ்டருக்கு தேசிய விருது கிடைத்தது.
வசனகர்த்தா அசோக் கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் கூடுதலாக உழைத்திருக்கிறார். சாதரணமாக இது ஒரு டப்பிங் படம் என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் கேஜிஎப்பைப் பொருத்தவரை ஒவ்வொரு மொழிக்குரிய முக்கியத்துவத்தை அளித்திருக்கிறோம். ஏனெனில் மொழி என்பது மதிப்புமிக்கது அதற்குரிய மரியாதை தரவேண்டும். ஒட்டு மொத்த படக்குழுவினரும் அதற்கான மரியாதையை வழங்கியிருக்கிறோம். ஒவ்வொரு மொழிக்கேற்ற வகையில், அதன் நேட்டிவிட்டி மாறாமல் வசனங்களை எழுதியிருக்கிறார்கள். இதற்காக வசனகர்த்தாவிற்கு பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேகர் என்ற கலைஞர் எனக்காக தமிழில் பின்னணி பேசி இருக்கிறார் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல் பாகத்திலேயே நான் தமிழில் பின்னணி பேச முயற்சித்தேன். ஆனால் முழுமையான தன்னம்பிக்கை இல்லாததால் பேசவில்லை. இனி வரும் படங்களில் தமிழில் பின்னணி பேச முயற்சிக்கிறேன்.
ஏப்ரல் 14ஆம் தேதியன்று கேஜிஎப் 2 வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.