கொன்றால் பாவம் – விமர்சனம்!

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கவேண்டிய கதையம்சம் உள்ள படம்.

‘ஆ கரால ராத்திரி’ என்ற கன்னட படத்தின் மறு உருவாக்கமே ‘கொன்றால் பாவம்’ என்ற பெயரில் தமிழில் வெளியாகியிருக்கிறது.  கன்னடத்தில் எழுதி, இயக்கிய தயாள் பத்மநாபன் தான், தமிழில் தயாரித்து, இயக்கியிருக்கிறார்.

‘ஆ கரால ராத்திரி’ கன்னட மொழிக்கான சிறந்த திரைப்பட விருதையும் பெற்றுள்ளது.

ஒரு முதிர்கன்னியின் அடங்கா காமத்தால் நடக்கும், ஒரு கொலை தான் இப்படத்தின் கதை.  1980 களில்  தர்மபுரி சுற்று வட்டார பகுதியில் நடப்பது போன்ற ஒரு சம்பவமாக ‘கொன்றால் பாவம்’ சித்தரிக்கப்பட்டுள்ளது. எப்படி இருக்கிறது? தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை  வருடும் படமா?  இல்லை நெருடக்கூடிய படமா?  பார்க்கலாம்!

வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க,  அவருடன்  சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ் , ‘டைகர்’ தங்கதுரை, மனோபாலா, எஸ்ஆர் சீனிவாசன், சுப்ரமணியம் சிவா, மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குடிகாரனான சார்லி, மற்றும் ஈஸ்வரி ராவின் மகள் வரலட்சுமி சரத்குமார். குடும்பத்தில் நிலவும் வறுமை காரணமாக வரலட்சுமி சரத்குமாருக்கு, திருமணம் என்பது சாத்தியப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஊராக பயணித்து வரும் சந்தோஷ் பிரதாப், ஒரு இரவு நேரத்தில் சார்லியின் வீட்டில் தங்குகிறார். மேலும் அவரிடம் நகைகளும், பணமும் இருப்பது இவர்களுக்கு தெரிய வருகிறது.  அதை கொள்ளையடிக்க வரலட்சுமி சரத்குமாரின் தலைமையில் சார்லியின் மொத்த குடும்பமும் திட்டமிடுகிறது. திட்டமிட்டபடி நடந்ததா, இல்லையா?  என்பதே ‘கொன்றால் பாவம்’ படத்தில் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

எந்த கதாபாத்திரமானாலும் அதை உள்வாங்கி நடிக்கக்கூடிய நடிகை, வரலட்சுமி சரத்குமார். கதாபாத்திரத்தை உணர்ந்து, இயக்குனரின் தேவைக்கேற்ப  நடித்துள்ளார். பெண்களை மயக்கும் கட்டுமஸ்தான உடற்கட்டில் சந்தோஷ் பிரதாப், நடித்திருக்கிறார். குடிகாரனாக சார்லி, ஈஸ்வரி ராவ் , ‘டைகர்’ தங்கதுரை, மனோபாலா, எஸ்ஆர் சீனிவாசன், சுப்ரமணியம் சிவா, மீசை ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். குறிப்பிட்டு சொல்லும்படியான நடிப்பு என்றால் அது வரலட்சுமி, மற்றும் ஈஸ்வரிராவின் நடிப்பு மட்டுமே!

மற்றபடி  வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் படம் பார்ப்பவர்களை எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை! என்பது தான் படத்தின் பெரும் பலவீனம். வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரத்தின் மேல் பரிதாபமும் ஏற்படவில்லை! கோபமும் வரவில்லை. அனைத்து கதாபாத்திரங்களும் அந்நியப்பட்டு நிற்கிறது.

செழியனின் ஒளிப்பதிவும்,  சாம் சி எஸ்’ ன் இசையும் சிறப்பாக இருக்கிறது. இரண்டுமே படத்தின் பெரும் பலம்.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு அதீதமானதாகவும், மிகைப்படுத்தப்பட்டதாகவும் இருக்கிறது. அதை படம் பார்ப்பவர்கள் வலுக்கட்டாயமாக நம்ப வேண்டும் என்பதற்காக ‘உண்மை கற்பனையை விட விநோதமானது’ என்று சொல்லி,  அதை நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார், இயக்குனர் தயாள் பத்மநாபன். அது அவரது நம்பிக்கையாகவே இருக்கட்டும்!?

ஆசை எப்படி சகஜமோ, அதைப்போல் காமமும் சகஜம் தான் என்பதை வலியுறுத்தி, அதற்காக கொலை செய்தாலும் தப்பில்லை!?  என்று சொல்லி, பெண்களை இழிவு படுத்தும் படமாகவே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சந்தோஷ் பிரதாப் ‘கர்லா கட்டையை’ சுற்றும் போது வரலட்சுமி சரத்குமார் பேசும் வசனம், இயக்குனர் தயாள் பத்மநாபனுடைய ரசனையின் உச்சம்!

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கவேண்டிய கதையம்சம் உள்ள படம் ‘கொன்றால் பாவம்’.

மொத்தத்தில இந்தப் படத்தை உடனே தியேட்டருக்கு சென்று பார்க்கணுமான்னு கேட்டீங்கன்னா.. கன்னடம் தெரிஞ்சா… டிஸ்னில OTT யில பாருங்க! சும்மாவே பார்க்கலாம். தமிழ்ல..  பார்க்கணும்னா OTT யில வரும்போது பாருங்க!