‘கொட்டுக்காளி’, இப்படத்தினில் சூரி, அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, ‘கூழாங்கல்’ படத்தினை இயக்கியிருந்த பி. எஸ். வினோத் ராஜ் இயக்கியிருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘கொட்டுக்காளி’ என்ற சொல் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஒரு வசவு சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.
மதுரை, அலங்காநல்லூர் பகுதியே கதைக்களம். விடிந்தும் விடியாத ஒரு காலைப்பொழுதில், மீனாட்சியின் (அன்னா பென்) அம்மா தலைகுளித்துவிட்டு ஈரத்துணியுடன் ஒரு கோவிலில் சாமி கும்பிடுகிறார். அதன் பிறகு வீட்டுக்கு வரும் அவர் மீனாட்சிக்கு விபூதி பூசி விடுகிறார். மீனாட்சியின் முறைமாமன் (சூரி) பாண்டி அவரது சகோதரிகள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் மீனாட்சியை அழைத்துக்கொண்டு, பண்ணைகுடியிலிருக்கும் இவர்கள் பாலமேடு பகுதியிலிருக்கும் பேயோட்டியை (மீனாட்சிக்கும் பேய் பிடித்திருப்பதாக நினைத்து) காணச் செல்கின்றனர். விடியற்காலையிலிருந்து சாயங்காலம் வரை நடக்கும் சில சுவாரசியமான சம்பவங்கள் தான் கொட்டுக்காளி படத்தின் கதை.
நடிகர் நடிகைகளை பொறுத்தவரை சூரி, அன்னா பென்னை விட, சூரியின் தங்கையாக நடித்திருக்கும் அடர் நிறம் கொண்ட பெண் சூப்பராக நடித்திருக்கிறார். படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தனித்தனியாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
முதல் காட்சியிலேயே, ஒளிப்பதிவாளர் சக்தி தனது திறமையினை வெளிப்படுத்தி விடுகிறார்.
படத்தில் பின்னணி இசை கிடையாது. இயற்கையான சுற்றுப்புற ஒலியை (Sync Sound) பதிவு செய்துள்ளனர். இது அவர்களுடனேயே பயனிப்பதை போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது.
பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூரிக்கு ஒரு சில டைலாக்குகள் மட்டுமே. அதை விட மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அன்னா பென்னுக்கு ‘அவன் அடிக்க மட்டுமா செய்வான்’ என்ற ஒரே டைலாக் மட்டுமே. மற்றபடி ஒரு பாடலை முணுமுணுக்கிறார்.
கொட்டுக்காளி திரைப்படத்தின் இயக்குநர் பி. எஸ். வினோத் ராஜ், ஒரு இளம் பெண்ணை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் பூடகமாக சொல்லியிருக்கிறார். அது ஏன்? என்று தெரியவில்லை! அந்த விஷயங்கள் எல்லோருக்கும் புரியாது. க்ளைமாக்ஸையும் படம் பார்ப்பவர்களே யூகித்து கொள்ளும்படி விட்டிருக்கிறார்.
காதலுக்கு எதிர்ப்பு, கட்டாய கல்யாணம் செய்ய முயற்சிக்கும் முறை மாமன், பெண்களை இழிவாக நினைக்கும் ஆண்கள், மூட நம்பிக்கை, முட்டாள்த்தனமான சடங்குகள் என அனைத்தையும், காலையிலிருந்து மாலைக்குள் சொல்ல முயற்சித்துள்ளார்.
கொட்டுக்காளி – வித்தியாசமான முயற்சி!