‘போகுமிடம் வெகு தூரமில்லை’ – விமர்சனம்!

ஷார்க் 9 பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், எம்.தியாகராஜன் தயாரித்துள்ள படம், போகுமிடம் வெகு தூரமில்லை. இதில் விமல்,கருணாஸ் ,மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ் குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை எழுதி இயக்கியிருக்கிறார், மைக்கேல் கே ராஜா. என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருக்க, டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த செல்வாக்குமிக்க ஒரு பெரிய மனிதர், சென்னை சாலை விபத்தில் மரணமடைகிறார். அவரது உடலை திருநெல்வேலிக்கு கொண்டு போய் சேர்க்கும் வேலை அமரர் வாகன ஓட்டுநர் விமலுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது, கூத்துக்கலைஞர் கருணாஸ் அந்த வண்டியில் பயணிக்க நேரிடுகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகின்றனர்.

திருநெல்வேலியை நோக்கி மதுரை செல்லும் வழியில் ஒரு காதல் ஜோடியை காப்பாற்றுகின்றனர். இதனால், பெண்ணின் உறவினர்களுக்கும் இவர்களுக்கும் நடக்கும் தகராறில், வண்டியிலிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பெரிய மனிதரின் பிணம் காணாமல் போகிறது. பிணத்தை எதிர்பார்த்திருக்கும் உறவினர்கள் கருணாஸுக்கு போன் செய்கிறார்கள். கருணாஸ் என்ன செய்தார். பிணம் கிடைத்ததா, இல்லையா? என்பதே போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படத்தின் கதை.

அமரர் வாகன ஓட்டுநர் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விமல் இயல்பாக நடித்திருக்கிறார்.

தெருக்கூத்து கலைஞர் நளின மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாஸ், சற்றே மிகை நடிப்பு! அவரது கதாபாத்திரம் சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறது க்ளைமாக்ஸில் கலங்க வைக்கிறது.

மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

முதல் பாதியில்  இருந்த எதிர்பாராத திருப்பங்கள் இரண்டாம் பாதியில் இல்லாதது படத்திற்கான மைனஸ். கருணாஸ் சென்ட் ‘ஸ்பிரே’ வாங்கும் போதே காட்சிகள் யூகமாகிவிடுகிறது.

க்ளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை!

போகுமிடம் வெகு தூரமில்லை – பரவாயில்லை!