மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில், நவீன் யெர்னேனி மற்றும் ரவிசங்கர் யெலமஞ்சலி தயாரிப்பில் வெளிவந்துள்ள படம், குஷி. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, சச்சின் கடேகர், சரண்யா பொன்வண்ணன், முரளி ஷர்மா, லட்சுமி, ஜெயராம், ரோகினி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஷிவ நிர்வானா எழுதி இயக்கியிருக்கிறார். தெலுங்கில் பிரதானமாகவும், தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
நாத்திகவாதியான சயின்டிஸ்ட், சச்சின் கடேகர் – சரண்யா பொன்வண்ணன் தம்பதியின் மகன், விஜய் தேவரகொண்டா. ஜோதிடத்தில் தனித்த நிபுணராக விளங்கும் ஜாம்பவான், முரளி ஷர்மாவின் மகள், சமந்தா.
சச்சின் கடேகர் – முரளி ஷர்மா இருவரும், அவ்வப்போது தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் மோதிக்கொள்பவர்கள்.
காஷ்மீரில் நடக்கும் ஒரு சந்திப்பின் போது விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் காதல் வயப்படுகின்றனர். இருவரது பெற்றோர்களும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். இருவருடைய ஜாதகங்களை ஆராயும் ஜோதிட நிபுணரான முரளி ஷர்மா, பரிகார பூஜை செய்தால் மட்டுமே இருவருக்கும் நடக்கும் திருமண வாழ்க்கை நன்கு அமையும் என்கிறார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கிறார், சச்சின் கடேகர். இதனால் விஜய் தேவர கொண்டாவும், சமந்தாவும் பதிவு திருமணம் செய்து கொண்டு, திருமண வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.
விஜய் தேவரகொண்டா – சமந்தா தம்பதியினருக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து ஏற்படும் பிரச்சனையில் இருவரும் பிரிகின்றனர். இதற்கு காரணம் ஜாதகமா? பரிகார பூஜை செய்யப்பட்டதா? இவர்கள் ஒன்று சேர்ந்தனரா, இல்லையா? என்பதே, ‘குஷி’ படத்தின் இளமை துள்ளும், அழகிய காதல் கதை!
விஜய் தேவரகொண்டா, சமந்தா சம்பந்தப்பட்ட காஷ்மீர் காட்சிகள் எல்லாவற்றிலுமே இளமையும், அழகும் ஒருசேர இருக்கிறது. காஷ்மீர் பின்னணியில் சமந்தாவின் அழகு, மேலும் மெருகேறுகிறது. இருவரும் பெர்ஃபெக்ட் மேட்ச்சாக இருக்கிறார்கள். அன்று பறித்த ஆப்பிளாக சமந்தா. அவர் வீசும் காதல் பார்வை, ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்யும்! பல காட்சிகளில், இவர்கள் நடித்தது போல் தெரியவில்லை.
திருமணத்திற்கு பின்னர் விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவருக்குமிடையே ஏற்படும் மோதல் காட்சிகளில், குறிப்பிடும்படி நடித்திருக்கின்றனர். இவர்களுடைய காதலும், மோதலும் படத்தின் பலமாக இருக்கிறது.
பார்த்து சலித்துப்போன காதல் காட்சிகள் தான் என்றாலும், விஜய் தேவரகொண்டாவையும் சமந்தாவையும் பார்க்கும்போது, ஏனோ, புதிதாக இருக்கிறது!
முரளி ஷர்மா, சச்சின் கடேகர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி, வெண்ணிலா கிஷோர் க்ளைமாக்ஸில், கடைசி பாலில் சிக்ஸர் அடிக்கும் பிரம்மாணந்தம் என அனைவருமே குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.
ஜெயராம் – ரோகினி தம்பதியினரின் சோகம் வலிய திணிக்கப்பட்டதாக இருக்கிறது.
காட்சிகளின் இடையே அவ்வப்போது தொய்வுகள் ஏற்படுவதை தவிர்த்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
டெக்னிக்கலாக ‘குஷி’ மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜி முரளியின் ஒளிப்பதிவு, காஷ்மீரின் அழகினை அள்ளிக்கொடுத்து ஆச்சர்யமூட்டுகிறது. விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியை ரசித்து படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹெஷாம் அப்துல் வஹாபின் இசையில், பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்த நிலையில், காட்சிகளுடன் பார்ப்பது சுகமாக இருக்கிறது. காட்சிகளுக்கேற்ற பின்னணி இசை சூப்பர்.
ஆத்திகமா? நாத்திகமா? என்பதில் இயக்குநர் ஷிவ நிர்வானா சற்று ஜகா வாங்கியிருக்கிறார். சிலருக்கு ஆத்திகத்தை தூக்கிப்பிடித்திருப்பதை போல் உணர்வு ஏற்படும்.
ஆங்காங்கே ஏற்படும் தொய்வான காட்சிகளையும், படத்தின் நீளத்தினையும் வலிய திணிக்கப்பட்ட சண்டைக் காட்சியினையும் தவிர்த்து விட்டுப்பார்த்தால், குஷி’ யில் குறையில்லை!
விஜய் தேவரகொண்டா – சமந்தா திரை வாழ்க்கையில் ‘குஷி’ சிறந்த படம்!