கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில், K.பாபு ரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர், வாலி மோகன்தாஸ் எழுதி, இயக்கியிருக்கும் படம், ரங்கோலி. இதில் கதாநாயகனாக ஹம்ரேஷ் அறிமுகமாக, அவருடன் ஆடுகளம் முருகதாஸ், பிரார்த்தனா சந்தீப், சாய் ஸ்ரீ பிரபாகரன், அக்சயா, அமித் பார்கவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘ரங்கோலி’ பெயருக்கேற்றபடி வண்ணக்கோலமா? அலங்கோலமா? பார்க்கலாம்!
சலவைத் தொழிலாளியான உத்தமர் காந்தி (‘ஆடுகளம்’ முருகதாஸ்) – காளியம்மா (சாய் ஸ்ரீ பிரபாகரன்) தம்பதியினருக்கு அறிமுக நாயகன் சத்யா (ஹம்ரேஷ்), வேம்பு லட்சுமி (அக்சயா) என இரண்டு பிள்ளைகள். இதில் அப்பாவின் சலைவத் தொழிலுக்கு, மகள் வேம்பு லட்சுமி உதவி வருகிறாள். சத்யா வீட்டருகே உள்ள அரசுப்பள்ளியில் பயின்று வருகிறான். பொது மைதானத்தில் விளையாடும் போது, இந்த மைதானம் ‘எங்களுக்கு’ சொந்தமானது வெளியே போ, என சில மாணவர்கள் சத்யாவிற்கு எதிராக குரல் கொடுக்க, புரட்சி கருத்துக்களை வீராவேசமாக பேசி சத்யா சண்டையிடுகிறான். இந்த சண்டை போலீஸ் ஸ்டேஷன் செல்கிறது. இதனால் நன்றாக படிக்கும் மாணவனான சத்யாவை, அவனது பெற்றோர்கள் தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர்.
தனியார் பள்ளியில் சேர்ந்த பிறகு அங்கு படிக்கும் மாணவர்களுக்கும், சத்யாவிற்கும் உடன் படிக்கும் மாணவியின் காதலுக்காக, சண்டை வருகிறது. சக மாணவர்கள் சத்யாவை ‘லோக்கல்’ என அழைத்து சண்டையிடுகின்றனர். அங்கேயும் புரட்சி கருத்து பேசி சண்டையிடுகிறார். இதைத் தொடர்ந்து பிரின்ஸ்பால் சத்யாவின் பெற்றோரை அழைத்து கண்டிக்கிறார். மேலும், பள்ளியிலிருந்து நீக்கம் செய்வதாக கூறுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே, இயக்குநரின் பெரும் குழப்பத்தில் உருவான, ‘ரங்கோலி’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
தனியார் பள்ளி – அரசுப் பள்ளி இவற்றுக்கான வித்தியாசங்களையும், சாதக பாதகங்களையும் தெளிவாக கூறாமல், போற போக்கில் உருவகப் படுத்தியிருப்பது, படத்தின் மிகப்பெரும் பலவீனம்.
அயராது உழைக்கும் ஒருவன், தன் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து, மகனை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க நினைப்பதில் என்ன தவறு? நன்றாக படிக்கும் சத்யாவிற்கு அரசுப் பள்ளியில் கிடைக்காத சில வசதிகள், தனியார் பள்ளியில் கிடைப்பது நல்லது தானே! அரசுப் பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும் வித்தியாசம் இருப்பது உண்மை தானே?
படிப்பவன், எங்கிருந்தாலும் படிப்பான். என வசனத்தை வைத்துவிட்டு, தனியார் பள்ளியில் படிப்பதற்கு திணறுவது போல் காட்சியும், வசனமும் எதற்காக?
சத்யா, தனியார் பள்ளியில் சேரும் போது பிரின்ஸ்பால் பேசும் ஆங்கிலத்தை, அப்பாவிற்கு அழகாக மொழிபெயர்த்து சொல்வது போல் காட்சி அமைத்து விட்டு, பயாலஜி வகுப்பில் திணறுவதை போல் காட்சி அமைத்தது எதற்கு?
இப்படி, படம் ஆரம்பம் முதல் இறுதி வரை, அண்ணன் ‘சீமான்’ போல் முன்னுக்கு பின் முரண்!
சத்யாவாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஹம்ரேஷ், நன்றாகவே நடித்திருக்கிறார். சில தோற்றத்தில், ஜிவி பிரகாஷ் மாதிரி தோற்றமளிக்கிறார். எனர்ஜெடிக் விடலைப் பயைன், தமிழ் சினிமாவிற்கு ரெடி! நல்ல இயக்குநர்கள் இவருக்கு கிடைத்தால் முன்னணி இடத்தை பிடிப்பார்! வாழ்த்துக்கள் ஹம்ரேஷ்.
பார்வதியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை பிரார்த்தனா சந்தீப், சத்யாவின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ், அவரது மனைவியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை சாய் ஸ்ரீ பிரபாகரன் ஆகியோர் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். குறிப்பாக வட்டிக்கு பணம் கொடுக்கும் நடிகரும், தமிழ் வாத்தியாராக நடித்திருக்கும் அமீத்தும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சேஷிங் காட்சிகளை சிறப்பாக படம் பிடித்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் மருதநாயகம்.
இசையமைப்பாளர் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓகே!
ரங்கோலி – அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்!