தமிழக அமைச்சருக்கு, தீவிர ‘எக்மோ’ சிகிச்சை!

தமிழகத்தில் கொரோனா  தொற்றின் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இருந்தாலும்,  முழுமையாக குறையவில்லை.

இந்நிலையில்,  திருவாரூரில் சில நாட்களுக்கு முன்பு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தார்.

திடீரென அவரது உடல் நிலை மோசமானதை அடுத்து அவருக்கு நடந்த கொரோனா தொற்று பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை ‘மியாட்’ மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, அரசு ராஜிவ் காந்தி பொதுமருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்  மீண்டும் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால்,  அரசு ராஜிவ் காந்தி பொதுமருத்துவமனையில் இருந்து, ‘ எம்ஜிஎம்’ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் ‘எக்மோ’ கருவி  மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமைச்சர் காமராஜ்ஜை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

இதனையடுத்து,  நேற்று இரவு 9.40 மணிக்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்  ‘எம்ஜிஎம்’ மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சையளித்து வரும்  மருத்துவர்களோடு  சுமார், அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.  

அமைச்சர் காமராஜ்ஜுக்கு தீவிர தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Comments are closed.