இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

Irandam Ulagaporin Kadaisi Gundu – Review

இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் வெளியான முதல் படம் ‘பரியேறும் பெருமாள்’. சாதிய ஆணவத்தின் அடுக்குமுறையை அம்மணமாக்கிய  இந்தப்படம் பாகுபாடின்றி அனைவராலும் ஏற்கப்பட்டு மாபெரும் வெற்றிபெற்றது.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, படத்தை இயக்கியுள்ளார் பா.ரஞ்சித்தின்  உதவியாளர் அதியன் ஆதிரை.

தினேஷ், ஆனந்தி நடித்துள்ள இந்தப்படம் எப்படி இருக்கிறது?

காய்லான் கடையில், லாரி ஓட்டுனராக வேலை பார்ப்பவர் ‘அட்டகத்தி ‘  தினேஷ்.  அவர் பழைய துருப்பிடித்த பொருட்களுடன் வெடிக்காத நாசகார ‘குண்டு’ ஒன்றையும் ஏற்றிக்கொண்டு வேறு ஒரு மொத்த வியாபாரிக்கு விற்க செல்கிறார்.

வெடிக்காத நிலையிலிருக்கும் அந்த குண்டு வெடித்தால் பெருத்த சேதம் ஏற்படுவதோடு ஆயுத வியாபாரி, அவரது  கைக்கூலி  ஜான் விஜய் உட்பட பலர் மாட்டிக்கொள்ள நேரிடும். இதனால் அவர்கள் அந்தகுண்டை கைப்பற்ற திட்டமிடுகின்றனர்.

குண்டு வெடித்ததா? அல்லது கைப்பற்ற பட்டதா? இது தான் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் விரிவாக்கப்பட்ட திரைக்கதை.

1939 லிருந்து 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத நிலையிலிருந்த வெடி குண்டுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.  இப்படி மூழ்கடிக்கப்பட்ட குண்டுகள் பல உயிர்களை பலி வாங்கிய சம்பவத்தையும், இருவேறு சமூகத்தை சேர்ந்த காதலர்களின் கதையையும் அழகாக பினைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை.

காய்லான் கடை லாரி ஓட்டுனராக தினேஷ். அவருடைய லாரி ஓட்டும் ஸ்டைலும், கரகரத்த குரலும், பாடி லாங்குவேஜும் அந்த கேரக்டருக்கு அப்படியே பொருந்தியுள்ளது. திறமையான நடிக்கத் தெரிந்த நடிகர்.

டீச்சராக நடித்துள்ள  ஆனந்தி, தினேஷை  காதலிப்பதால் அவர் பாதிக்கப்படும் காட்சிகளில் நடிப்பால் மிளிர்கிறார்.

சமூக போராளியாக வரும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்திற்கு ரித்விகா பொருத்தமான தேர்வு. தோழர்… தோழர்.. என அழைக்கும் ரித்விகாவின் கதாபாத்திரம், சமூக ஜனநாயகத்தை வென்றெடுக்க விடுக்கப்பட்ட இன்னொரு அழைப்பு! சில காட்சிகள் தான் என்றாலும் அவரது நடிப்பால் அனைவரையும் வசீகரித்து விடுகிறார்

படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை  பதற்றத்துடன் பயணிக்கும் திரைக்கதை ஆங்காங்கே தடம் மாறுவதை சரி செய்திருக்கலாம்.  முனீஸ்காந்த் பேசும் வசனங்கள் சிந்திக்க வைப்பதுடன் சிரிக்கவும் வைக்கிறது.

அதியன் ஆதிரை தன்னுடைய முதல் படத்திலேயே ஆயுதமில்லா  உலகை  உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தி உலகளாவிய பிரச்சனையை படமாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. திரைக்கதைக்கேற்ற கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. கலை இயக்குனர் தா.ராமலிங்கத்தின் பணி அளப்பரியது.

அறிமுக இசையமைப்பாளர்  தென்மாவின் பின்னணி இசையும், பாடல்களும் அவரது திறமையை பளிச்சிட வைக்கிறது.  ‘மாவளியோ மாவளி’ பாடலை திரும்ப… திரும்ப.. கேட்கலாம்!

இயக்குனர் அதியன் ஆதிரை காய்லான் கடையில் வேலை பார்த்தவர் என்பதால் காட்சிகள் மூலம் நம்மை திரைக்குள் அழைத்து கொள்கிறார்.

திரைப்பட ஊடகத்தின் வழியாக பா.ரஞ்சித், அதியன் ஆதிரை இருவரும் உலகிற்கு எழுதிய கண்டன கடிதம் தான், ‘குண்டு’.