திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடி முடிவு!

உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் ‘கொரனா’ இன்று வரை பல உயிர்களை பலி வாங்கிவருகிறது. அதை தடுக்க, ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் அமல்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தமிழகத்தில் ‘மார்ச் 19’ அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கொரனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட சில மாநிலங்களில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய  பொருட்களை  உற்பத்தி  செய்யும் தொழிற்சாலைகள் என எல்லா தொழில்களையும் நடத்துவதற்கு  நிபந்தனைகளுடன் ‘தமிழக அரசு’ அனுமதி வழங்கியுள்ளது.

திரையரங்குகள் மூடப்பட்ட பின் அதில் ஈடுபட்டுள்ள  50,000ம் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது.  

திரையரங்கு தொழிலை மீண்டும் தொடங்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என “தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்” வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…

திரையரங்கு உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடை முறைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டுகிறோம்.

அரசு வெளியிடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த குறைந்தது இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதால் அரசு உடனடியாக விதிமுறைகளை வெளியிட்டு  திரையரங்கு உரிமையாளர்கள் முன் தயாரிப்பு பணிகளை முடிக்க ஆவன  செய்ய வேண்டுகிறோம்.

தற்போது கொரானா ஊரடங்கு காலத்தில் அனைத்து பொருட்கள், போக்குவரத்து செலவுகள்  விலையேற்றம் பெற்றுள்ளன.

இந்தியாவில் சாமானிய  மக்களின்  ஒரே  பொழுதுபோக்கு திரையரங்குகளில் திரைப்படங்களை  கண்டுகளிப்பது.  சமூக  இடைவெளியின்  அடிப்படையில் குறைந்த  எண்ணிக்கையிலான  டிக்கட்டுகள்  விற்பனை செய்து பார்வையாளர்களை அனுமதிக்க முடியும்.

இதன் காரணமாக டிக்கட் விலையை அதிகரிக்காமல் அதே நேரத்தில் பொருளாதார  நெருக்கடியில்  இருக்ககூடிய திரையரங்கு தொழிலை பாதுகாக்கவும் பார்வையாளர்கள் வருகையை  உறுதிப்படுத்தி அதிகரிக்க கீழ்க்கண்ட கோரிக்கைகளை  மத்திய ,மாநில அரசுகள் நிறைவேற்றித்தர வேண்டுகிறோம்.

தமிழ்நாட்டில்  தற்போது  1000 திரையரங்குகள் இயங்கி வருகின்றது இவற்றில் தனி திரையரங்குகள்  700 . இரண்டு மற்றும் அதற்கு அதிகமான திரைகளை கொண்ட மால், மல்டிபிளக்ஸ் 300 உள்ளது.

தற்பொழுது  நடைமுறையிலுள்ள  உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 8% முழுவதுமாக ரத்து  செய்ய  வேண்டுகிறோம்

இதனை ரத்து செய்வதன் மூலம் திரையரங்க டிக்கட் கட்டணம் குறையும் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாக படம் பார்க்கும் வாய்ப்பு  கிடைக்கும் இதன் மூலம் திரையரங்கு, விநியோகஸ்தர்கள், அரசு என அனைத்து  பிரிவினருக்கும் வருவாய்  கூடுதலாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு  ஏற்படும்.

தனி திரையரங்குகளுக்கான GST வரியை  5% சதவிகிதமாக குறைத்து  நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு குறைத்து நிர்ணயம் செய்யும்  வரிக்கு தற்பொழுது  உணவகங்களுக்கு விதித்துள்ளது  போன்று உள்ளீடு மறுப்பு (no input tax credit)  முறையை அமுல்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு செய்வதன் மூலம் தற்பொழுது ₹100க்கு  விற்பனை செய்யப்படும் (GST 12% + LBTtax8%) டிக்கெட் விலை 84 ரூபாய் 5% GSTயுடன்  சேர்த்து குறையும்.

இதன் காரணமாக திரையரங்குகளில் டிக்கட் கட்டணம் குறையும், சாமான்ய மக்கள் திரையரங்குக்கு அதிகமாக வருவதற்கான சூழல் உருவாகும்.

மால், மல்டிபிளக்ஸ் திரைகளுக்கு உள்ளீடு அனுமதியுடன் தற்பொழுது நடைமுறையில் 18% , 12% GST வரியை  ரத்து செய்து, ஒரே GST 12% நிர்ணயம் செய்து தர வேண்டுகிறோம்.

தேசிய ஊரடங்கு காலத்திற்கு முன்பாக தனி திரையரங்குகளுக்கு அதிகபட்சமாக 15% பார்வையாளர்கள்  அளவில் தான் வருகை இருந்தது  மேற்கூறிய கோரிக்கைகளை  மத்திய, மாநில அரசுகள்  நிறைவேற்றும்  பட்சத்தில்  20% பார்வையாளர்கள்  வரை  திரையரங்குக்கு  வரக்கூடிய  சூழல் ஏற்படும் இல்லாத பட்சத்தில் 10% பார்வையாளர்களுக்கு குறைவாகவே வருவார்கள் இதன் காரணமாக ஏற்கனவே  நஷ்டத்தில் இயங்கிவரும் திரையரங்கு  தொழில் நலிவடைவதற்கான  சூழல் உருவாகும்.

தற்பொழுது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடியுள்ள நிலையில் திரையரங்கிற்கான  மின் கட்டணத்தில்  50% சலுகை தர வேண்டுகிறோம். மேலும் தற்பொழுது முழு முடக்ககாலம் வரை திரையரங்கிற்கான  சொத்து வரியை  முழுவதுமாக  ரத்து செய்ய  வேண்டுகிறோம் தொழில் துவங்கிய  பிறகு திரை தொழில்  சகஜ நிலை  திரும்பும்வரை  சொத்து வரியில் 50% சலுகை தர வேண்டுகிறோம்.

தமிழகத்தில் கிராமங்கள், சிறு நகரங்களில்  கெளரவத்திற்காக  காலங்காலமாக இயங்கிவரும்  தனித்திரையரங்குகளை அழிவில்  இருந்து  காத்திட  மத்திய மாநில அரசுகள் மேற்காணும் எங்களது  கோரிக்கைகளை  நிறைவேற்றி  தர  வேண்டுகிறோம்.

M. திருப்பூர் சுப்பிரமணியன் தலைவர், R.பன்னீர் செல்வம் பொதுசெயலாளர், D.C.இளங்கோவன் பொருளாளர்.

Comments are closed.