லத்தி – விமர்சனம்!

நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து ‘ராணா புரொடக்ஷன்’ சார்பில் தயாரித்துள்ள அதிரடி ஆக்‌ஷன் படம், லத்தி (லத்தி சார்ஜ்). இப்படத்தினை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்க, விஷால், சுனைனா, பிரபு, ரமணா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கிறது.

போலீஸ் கான்ஸ்டபிள் விஷால். குற்றம் செய்யாத ஒருவரை லத்தியால் கடுமையாக தக்கியதற்காக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். தனது மனைவி சுனைனாவின் வற்புறுத்தலின் பேரில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவருடைய சிபாரிசில் மீண்டும் வேலைக்கு சேர்கிறார். இனிமேல் லத்தியை தொடுவதில்லை என சபதம் எடுக்கிறார். அவரது போதாத காலம். போலீஸ் உயரதிகாரி ஒருவரின் கட்டளைப்படி ரௌடி ரமணாவை லத்தியால் தாக்குகிறார். இதனால் கடும் கோபத்திற்கு  உள்ளாகும் மிகப்பெரும் அரசியல் செல்வாக்கு கொண்ட ரமணா, விஷாலை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார். என்ன நடந்தது? என்பது தான் ‘லத்தி’ படத்தின் கதை.

ஆக்‌ஷன் படங்களுக்கான, அட்டகாசமான உடல் வாகு விஷாலுக்கு. போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி போகிறார். சுனைனாவுடனான ரொமேன்ஸிலும், லத்தியை சுழற்றும் ஸ்டைலிலும், மகனை ரௌடிகளிடமிருந்து காப்பாற்ற போராடும் இடத்திலும் நன்றாக நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில் ரௌடிகளை அடித்து பறக்கவிடும் காட்சிகளில் கைதட்டல்களை அள்ளுகிறார். மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மகனை காப்பாற்றும் காட்சியில் அவர் பறிதவிக்கும்போது, தாய்மார்கள் பதறுவார்கள்.

விஷாலுக்கு மனைவியாக நடித்திருக்கும் சுனைனா, கிடைத்த ஒரு சில காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ரமணா, மிரட்டல்! தமிழ் சினிமாவிற்கு ஒரு சூப்பர் வில்லன்!

பிரபு, தலைவாசல் விஜய், மாஸ்டர்  லிரிஷ் ராகவ்,  சன்னி உள்ளிட்ட நடிகர்களும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் பீட்டர் ஹெய்னின் சண்டைக்காட்சிகளை பிரமாண்டமாக படமக்கியிருக்கிறார்கள்..

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் கார்த்திக் நேதா எழுதி, ரஞ்சித் கோவிந்த் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ள  ‘ஊஞ்சல் மனம்’ என்ற பாடல் இனிமையாக இருக்கிறது.

கதை எழுதி இயக்கியிருக்கும்  வினோத் குமார்,  முதல் பாதியை குடும்ப செண்டிமெண்டோடும், இரண்டாம் பாதியை மிகப்பெரிய ஆக்‌ஷன் காட்சிகளோடும் படமாக்கியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் சில இடங்களில் நம்பகத்தன்மை காணாமல் போவதால் ரசிக்க முடியவில்லை! குறிப்பாக சிறுவனை (லிரிஷ் ராகவ்) மண்ணில் புதைக்கும் காட்சியினை சொல்லலாம்!

’லத்தி’ ஆக்‌ஷன் பிரியர்களுக்கான படம்!