மாமியார் மருமகள் அலப்பறை! ‘எல்.ஜி. எம்’ – விமர்சனம்!

தோனி என்டர்டெயின்மென்ட் சார்பில், சாக்ஷி சிங் தோனி மற்றும் விகாஸ் ஹசிஜா தயாரித்துள்ள திரைப்படம், ‘எல்.ஜி. எம்.’ ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஶ்ரீநாத், வினோதினி, ஆர். ஜே. விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தினை, இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி எழுதி இயக்கியிருப்பதுடன், இசையமைத்திருக்கிறார்.

எல்.ஜி. எம் திரைப்படத்தை தமிழகம் முழுவதும், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிட்டுள்ளது.

ஹரிஷ் கல்யாண், இவானா இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வரும் காதலர்கள். இவர்கள் இரண்டு வருடங்களுக்கு பிறகு, கல்யாணம் செய்து கொள்ள முடிவு எடுக்கிறார்கள். இதற்கு இரு வீட்டினரும் சம்மதம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இவானா, ஹரீஷ் கல்யாணுடன் தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறார். ஆனால் ஹரிஷ் கல்யாணுக்கு அம்மா நதியாவுடன் சேர்ந்து இருக்கவே விரும்புகிறார். இதனால், இவானா – ஹரிஷ் கல்யாண் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இவானா இதை சரிசெய்ய, ஒரு ஐடியா கொடுக்கிறார். அதாவது நதியாவுடன் இவானா பழகி பார்த்த பிறகு, கல்யாணம் குறித்து முடிவெடுக்கலாம் என கூறுகிறார். ஹரிஷ் கல்யாணும் இதற்கு சம்மதம் தெரிவித்து ஒரு ட்ரிப் செல்கின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், எல்.ஜி. எம் (LGM – Let’s Get Married).

எல்.ஜி. எம் திரைப்படம் முழுக்க… முழுக்க… பெண்கள் குடும்பத்துடன் பார்த்து ரசிப்பதற்கு என்றே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே நடக்கும் சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பே திரைக்கதை.  மெசேஜ் சொல்லி போரடிக்காமல், குடும்பத்தில் பலரும் அனுபவித்த, அனுபவித்து வரும் விஷயத்தை என்டர்டெய்ன்மென்ட்டாக சொல்லியிருப்பது படத்தின் ஹைலைட். அதுவும் பெண்களுக்கு பிடித்த பாணியில் சொல்லியிருப்பது, இயக்குநரின் வெற்றி.

ஹரிஷ் கல்யாண், இவானா- நதியா இருவரிடையேயும் மாட்டிக்கொண்டு முழிக்கும் தருனம் ரசனையானவை. அவர், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். மற்றபடி, 2 கே கிட்ஸின் சாக்லெட் பாயாக வந்து போகிறார்.

இவானா- நதியா இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளனர். இருவரும் சேர்ந்து கொண்டு கூத்தடிக்கும் காட்சிகளில், சில வெறுப்பேற்றினாலும், சில காட்சிகள் ரசிக்க வைக்கிறது. க்ளைமாக்ஸில் இருவரும் புலியிடம் சிக்கும் காட்சி, குழந்தைகளுக்கான ஐட்டம்.

இப்படியெல்லாம்.. இருந்தா எப்படி இருக்கும். என ஏங்கும் பெண்கள் இவர்கள் அடிக்கும் கூத்தை ரசிப்பார்கள்.

யோகி பாபு, ஆர். ஜே.விஜய், ஶ்ரீநாத், வினோதினி உள்ளிட்டவர்கள் முடிந்தவரை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

விஸ்வஜித் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. இயக்குநர் ரமேஷ் தமிழ்மணியே இசையமைத்திருக்கிறார். ஓகே. பாடல்கள் கேட்கமுடிகிறது.

திரைக்கதையினை இன்னும் கொஞ்சம் சிறப்பாக வடிவமைத்திருந்தால் எல்லோரும் ரசிக்கும்படி இருந்திருக்கும்.