சமந்தா தயாரித்து நடித்த ‘மா இண்டி பங்காரம்’ என்ற தெலுங்கு மொழிப் படத்தின் டப்பிங் தான் எங்கள் தங்கம். இதில் சமந்தா , திகந்த் மஞ்சாலே, கௌதமி , ஆனந்த் , ஸ்ரீ லக்ஷ்மி , குல்ஷன் தேவய்யா , மன்ஜூஷா ,சைதன்ய கிருஷ்ணா , ஸ்ரீமுகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியிருக்கிறார்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த சமந்தாவும், மிகப்பெரிய செல்வாக்குள்ள அரசியல்வாதியின் மகனான திகந்த் மஞ்சாலேவும் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். திகந்த் மஞ்சாலேவின் வீட்டில் அவரது அப்பா ஆனந்தை தவிர மற்றவர்கள் ஓரளவு சமந்தாவை ஏற்றுக்கொள்கின்றனர். இந்நிலையில் திகந்த் மஞ்சாலேவின் தங்கைக்கு திருமணம் நடப்பதால் கணவன் மனைவி இருவரும் ஊருக்கு வருகிறார்கள். வந்த இடத்தில் நக்சல் தலைவன் ஒருவனால் சமந்தாவிற்கும், அவர்களது குடும்பத்திற்கும் ஆபத்து வருகிறது. அது என்ன? சமந்தா ஏற்றுக்கொள்ளப்பட்டாரா? இதுவே ‘எங்கள் தங்கம்’ படத்தின் மீதிக் கதை.
சமந்தாவிற்கு பூவாகவும், புயலாகவும் மாறும் கதாபாத்திரம் அதை ரசிகர்கள் ரசிக்கும்படி செய்திருக்கிறார். சமையலில் செய்யும் தில்லுமுல்லு காட்சிகளிலும், நக்டலைட்டுகளை அடித்து பறக்கவிடும் காட்சிகளிலும் பெண்கள் கைதட்டி மகிழுகின்றனர்.
சமந்தாவின் கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலே, வில்லன் குல்ஷன் தேவய்யா, ஆனந்த், கெளதமி, பாட்டி ஸ்ரீ லக்ஷ்மி, சைதன்ய கிருஷ்ணா, ஸ்ரீமுகி ஆகியோர் குறிப்பிடும்படி நடித்துள்ளனர். சமந்தாவின் தோழியாக நடித்திருக்கும் மன்ஜூஷா கொஞ்சம் கூடுதல் கவனம் பெறுகிறார்.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் சிறப்பாக இருக்கிறது.
படத்தின் முதல் பாதியை கலகலப்பாகவும், இரண்டாம் பாதி கொஞ்சம் அடிதடியாகவும் திரைக்கதையை நகர்த்தி அரசியல், நக்சல் இவற்றின் பின்னணியில் ஒரு பெரிய குடும்பத்தில் , ஆதரவற்ற பெண் ஒருவர் அக்குடும்பத்தின் அன்பைப்பெற முயற்சித்து வெற்றி பெறுவதை ஜனரஞ்சகமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி.
‘எங்கள் தங்கம்’ – கமர்ஷியல்!