‘பாலன்’ – விமர்சனம்!

‘கே வி என் ப்ரொடக்ஷன்ஸ்’ வெங்கட் கே. நாராயணா மற்றும் ‘தேஸ்பியான் பிலிம்ஸ்’ ஷைலஜா தேசாய் ஃபென் ஆகியோரது தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பாலன். ஜித்து மாதவன் எழுதிய கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் சிதம்பரம். ஃபர்ஸானா பலத்திங்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருடன் ஆதிசேஷன் கே. ஆர் , சினான், ஜீன் பால் லால், கிரிஷ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு: ஷைஜூ காலித். இசை: சுஷின் ஷியாம்.

ஃபர்ஸானா பலத்திங்கல், சிறை தண்டனையை அனுபவித்து விட்டு தனது மகன் சிறுவன் ஆதிசேஷனுடன் வெளியே வருகிறார். ஏற்கனவே தன்னைப்பற்றி தெரிந்தவர்களுடன் வாழ விரும்பாமல் தனித்து வாழ விரும்புகிறார். இதனால் அவர்கள் தங்களது அடையாலத்தை மறைத்து வேறு பெயர்களுடன் ஒவ்வொரு ஊராக செல்கின்றனர். செல்லும் இடங்களில் அசௌகரியம் ஏற்பட்டால் உடனே அந்த இடைத்தை விட்டு கிளம்பிவிடுகின்றனர். இவ்வாறான சூழலில் ஒரு மூதாட்டியை கவனித்து கொள்ளும் வாய்ப்பினை உருவாக்கிக்கொண்டு அங்கேயே வாழ முடிவு செய்கிறார். அப்போது சிறை தொடர்பு துரத்தி வருகிறது. அதன் பிறகு மகன் ஆதி சேஷனும், அவரது அம்மாவும் பிரிகின்றனர். வருடங்கள் சென்ற நிலையில் அம்மாவைத் தேடி ஆதிசேஷன் வருகிறான். இருவரும் சேர்ந்தார்களா? என்பதைப் பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிதம்பரம்.

ஃபர்சானா பலத்திங்கல் கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலுமே தனது நடிப்பினை அழுத்தமாக பதிவு செய்கிறார். கிடைக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை பயன்படுத்திக்கொண்டு, ஒரு பக்கா கிரிமினலாக அடையாளத்தை மாற்றி, அந்த சிறுவனையும் அதற்கு பழக்கப்படுத்துகிறார். அதிகமாக பேசாமல் அவருடைய அகண்ட கண்களின் மூலம் காட்சிகளை சுவாரசியப்படுத்தி விடுகிறார்.

சிறுவன் ஆதிசேஷன் கே.ஆர், ஃபர்சானாவுக்கு கொஞ்சம் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். அம்மா சொல்லிக்கொடுப்பதை அப்படியே பிடித்துக்கொண்டு செயல்படும் விதத்தில் அவரை மிஞ்சுகிறார். ஸ்கூல் பேக்கில் தனது யூனிஃபார்ம் ட்ரஸ்ஸை மறைப்பதன் மூலமாக தனது அடையாளத்தை அழிக்க முற்படும் காட்சியில் அம்மாவை மிஞ்ச முயற்சிக்கிறார். சிறப்பான நடிப்பு.

வளர்ந்தவிட்ட  பாலனாக நடித்திருக்கும் ஜினன், ஓகேவான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் டோவினோ தாமஸ். அது படத்திற்கு பலமாக இருக்கிறது.  மற்றபடி காவலராக நடித்திருக்கும் ஜீன் பவுல் லால், சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கிரிஷ் ஏ.டி, படுத்தபடி நடித்திருக்கும் பாட்டி  உள்ளிட்டவர்களும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு படத்தின் பெரும் பலமாக இருக்கிறது. காட்சிகளின் சூழலை ரசிகர்கள் உணரும் வண்ணம் படம்பிடித்து அசத்தியிருக்கிறார். சுஷின் ஷாம் பின்னணி இசையும் காட்சிகளை மேம்படுத்துகிறது. ஒளிப்பதிவும், இசையும் பல காட்சிகளில் ரசிகர்களுக்கு திகில் உணர்வையும் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்ற பதட்டத்தினையும் ஏற்படுத்துகிறது.

ஃபர்சானாவின் கதாபாத்திரத்தை வடிவமைத்த கதையாசிரியர் ஜித்து மாதவன், அந்த கதாபாத்திரத்தின் பின்னணியையும், அதன் தன்மையையும் இன்னும் தெளிவாக வடிவமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

க்ரைம் திரைப்படங்களை ரசிக்கும் ரசிகர்களை பாலன் ஏமாற்றவில்லை!