மாவட்டச் செயலாளர்களின் ‘சாதி’ அரசியல், ‘மாமன்னன்’ விமர்சனம்!

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், சுனில் ரெட்டி, லால், கீதா கைலாசம், விஜயகுமார், அழகம் பெருமாள், ரவீனா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், மாமன்னன். எழுதி இயக்கியிருக்கிறார், மாரி செல்வராஜ்.

பிரதான கட்சியின் மாவட்டச் செயலாளர், முக்கிய அரசியல் பிரமுகர் ஃபஹத் ஃபாசில். இவருடைய கட்சியின் எம் எல் ஏ’வாக இருப்பவர் வடிவேலு, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். வடிவேலுவின் மகன் உதயநிதி ஸ்டாலின் கல்லூரி படிப்பினை முடித்துவிட்டு தற்காப்பு பயிற்சிப் பள்ளியையும், பன்றி வளர்க்கும் தொழிலையும் செய்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலினின் கல்லூரித் தோழி கீர்த்தி சுரேஷ். இவர் மணவ, மாணவிகளுக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான இடத்தில், இலவசமாக பாடம் எடுத்து வருகிறார். இதனால், ஃபஹத் ஃபாசிலின் அண்ணன் சுனில் ஷெட்டி நடத்தி வரும் கல்வி நிறுவனத்தின் வருவாய் குறைகிறது. ஆத்திரமடையும் அவர், உதயநிதியின் இடத்திற்கு ஆட்களுடன் சென்று பொருட்களையும், ஆட்களையும் அடித்து நொறுக்குகிறார். இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படுகிறது. ஃபஹத் ஃபாசில சமரசம் செய்வதற்காக எம் எல் ஏ வடிவேலுவையும், அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினையும் வரவழைக்கிறார். இந்த சமரச பேச்சுவார்த்தையில் வடிவேலு அவமானப் படுத்தப்படுவதுடன் அவரையும், உதயநிதி ஸ்டாலினையும் தக்குகிறார்.

இந்த சம்பவம் கட்சித்தலைவரும், முதல்வருமான லால் கவனத்திற்கு செல்கிறது. லால், ஃபஹத்ஃபாசிலை நேரில் அழைத்து கண்டிப்பதுடன் கட்சியிலிருந்து அவரை நீக்குகிறார். எலெக்‌ஷன் நடைபெறுகிறது. வடிவேலுவும் ஃபஹத் ஃபாசிலும் நேருக்கு நேர் மோதுகின்றனர். யார் வெற்றி பெற்றார்? என்பதே ‘சாதி’ அரசியலைச் சொல்லும் மாமன்னன் படத்தின் திரைக்கதை.

மாமன்னன் படத்தின் கதாநாயகன் வடிவேலு. கதாபாத்திரமாக மாறி நடித்திருக்கிறார். சில காட்சிகளில் அவர் கண்ணீர் சிந்தி, படம் பார்ப்பவர்களின் கண்களில் நீர் கசியச்செய்கிறார். படம் முழுவதும் சிறப்பாக நடித்து, சிறந்த நடிகராக பரிமளிக்கிறார்.

கண்முன் நடக்கும் அநீதிகளை கண்டு கொதிக்கும் இளைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார், உதயநிதி ஸ்டாலின். இயக்குநரின் தேவைக்கேற்ப, நடித்திருக்கிறார். காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த, இன்றைய இளைஞனின் எண்ண ஓட்டத்தை, பிரதிபலிக்கும் வசனங்களை பேசி, பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறார்.

கீர்த்தி சுரேஷ் துணிச்சல் மிகுந்த, கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அவரைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை!

மாவட்டச் செயலாளராக ஃபஹத் ஃபாசில் நடிப்பினில் வடிவேலுவை ஓரம் கட்டியுள்ளார். கட்சியின் முக்கியமான மாவட்டச் செயளாலராக, முதல்வர் லாலிடம் கெத்து காட்டும் இடம் சூப்பர். ஆதிக்க மனபான்மை வெறிப்பிடித்த இளைஞராக, சூப்பராக நடித்திருக்கிறார். எலெக்‌ஷன் ரிஸல்ட் சமயத்தில் வடிவேலுவிடம் கை கொடுக்கும்போது மிரட்டல் பார்வை!

அரசியலில் நடந்துவரும் உண்மை சம்பவங்கள் படமாக்கப்பட்டிருக்கிறது.

சமூக நீதிக்காவலராக முதலமைச்சர் கதாபாத்திரத்தில் லால் ஓகே!

க்ளைமாக்ஸ், (உண்மைச் சம்பவம்) ‘ட்ச்’.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்திற்கான பலம்.

இயக்குநர் மாரி செல்வராஜ், இந்தப் படத்திலும் தனது பாணியிலான தலித் அரசியல் பேசியிருக்கிறார்.

மாமன்னன்– தலித் அரசியலின் அடுத்தக் கட்டம்!