மாயோன் ~ விமர்சனம்!

இன்றைய தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் வியந்து ஆராய்ந்து கொண்டிருக்கும் மகத்தான கலைப்படைப்புகள் பல தமிழர்களின் படைப்புகளாகும். அதற்கு சாட்சிகளாக விண்ணை முட்டி நிற்கும் தஞ்சை பெரிய கோவில், உள்ளிட்ட ஆலயங்கள் தமிழக பண்பாட்டின் பெருமிதம். இதில் அறிவியலுடன் ஆண்மீகமும் இணைந்து இருப்பது தான் வியப்பின் உச்சம்!

இவ்வாறான ஒரு பழம் பெருமை மிக்க கிருஷ்ணன் கோவிலில் இருக்கும் புதயலை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றது ஒரு கும்பல். இரவு நேரத்தில் அந்த கோவிலின் உள்ளே யார் நுழைந்தாலும் அவர்களுக்கு சித்த பிரம்மை ஏற்படுவதுடன் சில சமயங்களில் உயிரும் பறிபோகிறது. இதை மீறி அந்தக்கும்பல் கோவிலுக்குள் நுழைந்து புதயலை கொள்ளையடித்ததா.. இல்லையா..? என்பது தான் ‘மாயோன்’ படத்தின் கதை.

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கத்தின் எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான திரைக்கதைக்கு ஏற்ப இயக்கி இருக்கிறார் இயக்குனர் என்.கிஷோர்.

மாயோன் மலை, கிருஷ்ணர் கோவிலின் உட்புறமும், வெளிப்புறமும் அழகாக படம்பிடித்துள்ளனர். ஆர்ட் டைரக்டரை பாராட்டவேண்டும். குறிப்பாக சயனக் கோலத்தில் இருக்கும் பெருமாள் சிலை வடிவமைப்பைச் சொல்லலாம்!

நடிகர் சிபிராஜ் தொல்லியல் துறை நிபுணராக கொடுத்த வேலையை முடிந்தவைரை செய்து இருக்கிறார். ஒரு சில முகபாவனைகள் மட்டுமே தேவைப்படுகிற அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார்.

தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ஹரிஷ் பெராடி, பகவதி பெருமாள் என அவரவர் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கே.எஸ்.ரவிக்குமார், ஹரிஷ் பெராடி இருவரும் தனிக்கவனம் பெறுகின்றனர். பகவதி பெருமாள் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.

ராம் பிரசாத்தின் ஒளிப்பதிவு படத்தின் பெரிய பலம். பிரம்மாண்டமான கோவில் அரங்கினையும் நிஜக்கோவிலையும் பிரமிக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார். கோவிலின் பாதாள அறைக்குள் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன்,பகவதி பெருமாள் ஆகியோர் செல்லும்போது நாமும் அவர்கள் கூடவே அந்த மாயலோகத்திற்குள் பிரவேசிப்பதைப்போல் உணர்கிறோம். இந்தக்காட்சியில் மெலிதான மிரட்டலையும் உணர முடிகிறது.

இளையராஜாவின் இசையில் ‘மாயோனே..’  பாடல் கிருஷ்ண பக்தர்களை மட்டுமின்றி அனைவரையும் மயக்குகிறது.

புராதனக் கோவில்களின் உள்ளே புதைந்து இருக்கும் பொக்கிஷங்களையும், அதை எளிதில் யாரும் நெருங்கமுடியாத அளவில் கட்டமைக்கப்பட்ட விதமும் பிரமிப்பு!

மாயலோகத்துக்குள் பிரவேசித்த அனுபவம் வேண்டுமென்றால் மாயோன்,படத்திற்கு செல்லலாம்!