பட்டாம்பூச்சி – விமர்சனம்!

‘அவ்னி டெலி மீடியா’ சார்பினில் குஷ்பூ சுந்தர் தயாரித்து சுந்தர் சி , ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம் ‘பட்டாம்பூச்சி’. எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி.

இப்படம் முழுக்க முழுக்க சைக்கோ, ஹாரர், த்ரில்லர் வகைப்படங்களை விரும்பிப்பார்க்கும் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனை கைதியான ஜெய், தூக்கிலிடுவதற்கு முன்னர் ‘போலீசாரால் இதுவரை கண்டு பிடிக்க முடியாமல் இருக்கும் ‘பட்டாம்பூச்சி’ என்ற கொடூர சைக்கோ சீரியல் கில்லர் நான் தான்’ என்று ஒரு பெண் நிருபரிடம் சொல்கிறார். இதை அறியும் போலீஸ் அதிகாரிகள் திடுக்கிடுகின்றனர். ஜெய் சொல்வதை உறுதி படுத்த போலீஸ் அதிகாரியான சுந்தர் சி யிடம் பொருப்பு ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் ஜெய், சுந்தர் சி யை பகடைக்காய் ஆக்கி மேலும் ஒரு கொடூரக்கொலையை செய்துவிட்டு தான் குற்றமற்றவன் என நீதிமன்றத்தின் மூலம் விடுதலை பெற்று வெளியே வருகிறார். அத்துடன் சுந்தர் சி யை சுற்றியிருப்பவர்களுக்கும் அவரால் மிரட்டல் விடுக்கப்படுகிறது. செய்வதறியாது திகைத்து நிற்கும் சுந்தர் சி என்ன செய்தார்? என்பதுதான் ‘பட்டாம்பூச்சி’ யின் குலை நடுங்க வைக்கும் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

படம் ஆரம்பித்த சில காட்சிகளிலேயே பரபரப்பு தொற்றி கொள்கிறது. எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி சுவாரஸ்யமாக செல்லும் திரைக்கதையில் அவ்வப்போது தொய்வு ஏற்படுகிறது. தவிர்த்திருக்கலாம்.

ஜெய் செய்யும் ஒவ்வொரு கொலையுமே பதைபதைக்க வைக்கிறது. குலை நடுங்க வைக்கும் சீரியல் கில்லராக நடித்திருக்கும் அவர் சில இடங்களில் பயமுறுத்தி இருக்கிறார். க்ளைமாக்ஸில் ஹனிரோஸை காலால் எட்டி உதைக்கும் காட்சிகளில் உச்சபட்ச கொடூரத்தை காட்டியிருக்கிறார்.

சுந்தர்.சி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், ஹனிரோஸை விரும்புபவராகவும் நடித்திருக்கிறார். வழக்கமான அதே பாணி. ஆக்‌ஷன் காட்சிகளில் கவனிக்கத்தக்க நடிப்பினை கொடுத்துள்ளார். ஜெய்க்கு இருக்கும் புத்தி சாதூர்யம் சுந்தர் சிக்கு இல்லாதது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.

நிருபராக நடித்திருக்கும் ஹனி ரோஸ், க்ளைமாக்ஸ் காட்சியில் சிறப்பான பங்களிப்பினை கொடுத்துள்ளார்.

இமான் அண்ணாச்சி கொலை செய்யப்படும் காட்சி தேவையற்ற ஒன்றாகவே இருக்கிறது.

நவநீத் சுந்தரின் இசை, கிருஷ்ணசுவாமியின் ஒளிப்பதிவு இரண்டும் திரைக்கதைக்கு ஏற்ற பங்களிப்பினை கொடுத்துள்ளது. படத்தொகுப்பாளர் பென்னி ஆலிவரின் பங்களிப்பு குறைவாகவே தோன்றுகிறது..

லாஜிக் மீறல்கள் இருந்த போதிலும் யூகிக்கமுடியாத திரைக்கதை ஆறுதல் அளிக்கிறது. ஹாரர், சைக்கோப் பட பிரியர்களுக்கு ‘பட்டாம்பூச்சி’ பிடிக்கும்!